“வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!”
இம்சை அரசனில் வடிவேலு சீரியஸாகப் பேசிய இந்த வசனம், இன்று வரையிலும் காமெடியாகப் பேசப்பட்டு வருவதாலோ என்னவோ, வரலாறு உருவாக்கப்படுவதற்கு முதன்மைச் சான்றாகத் திகழும் தொல்லியல் ஆதாரங்களைப் பாதுகாக்கும் விஷயத்தில் வெகு அலட்சியமாக இருக்கிறது அரசாங்கம். இந்த விவகாரத்துக்குள் நுழைவதற்குமுன் தொல்லியல் குறித்து முதலில் தெரிந்துகொள்வோம்.
நமது பாரம்பரியத்தைக் காத்திட விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். ஆம். எத்தனையோ தொல்லியல் ஆதாரங்கள் பூமிக்குள் உறங்கிக் கிடக்கின்றன. அவற்றை தோண்டி எடுத்து வெளிக்கொண்டு வரும்போதுதான், உண்மையான வராலாறு வெளிப்படும்.
ரஜினி பாடிய மொகஞ்சதாரோவும் அகழாய்வுதான்!
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்த மனித வாழ்க்கையை அறிந்திட தொல்லியல் அவசியமாகிறது. எழுத்துச்சான்று எதுவும் இல்லாத கற்கால மக்களின் வரலாற்றை அறிய, அவர்கள் வாழ்ந்த இடங்களை அகழாய்வு செய்து, பயன்படுத்திய பழமையான பொருட்களைக் கண்டறிவதன் மூலம், அவர்களின் நாகரீகத்தை அறிந்துகொள்ள முடியும்.
‘மொகஞ்சதாரோ.. உன்னில் நொழஞ்சதாரோ?’ என, எந்திரனில் ஐஸ்வர்யா ராயை ரஜினி வர்ணித்துப் பாடியதன் பின்னணியில்கூட ‘அகழாய்வு’ எனப்படும் பெரிய சங்கதி உண்டு. ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய இடங்களில் மேற்கொண்ட தொல்பொருள் ஆராய்ச்சிதான், சுமார் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரிகத்தை வெளிக்கொண்டு வந்தது.
இயற்கை சவால்களை எதிர்கொண்ட மனிதன்!
ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனித இனம் தோன்றியிருக்கலாம். தான் வாழ்ந்த பகுதிகளில் பலவித இயற்கை சவால்களை எதிர்கொண்டு, அவன் எவ்வாறு வெற்றி பெற்றான் என்பதை அறிந்திட அகழாய்வு உதவுகிறது. மேய்ச்சல் தொழிலை விட்டுவிட்டு மனிதன் வேளாண்மைக்கு மாறியது, மிக நேர்த்தியான மட்பாண்டங்களைப் பெருமளவில் உற்பத்தி செய்தது, தானியங்களைச் சேமித்து வைத்தது, செம்பு, இரும்பு போன்ற உலோகங்களினால் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் போர்க்கருவிகள் செய்ய கற்றுக்கொண்டது, காட்டு விலங்குகளை எப்படி வீட்டு விலங்குகளாக்கிப் பழக்கினான் என்பதையெல்லாம் நம்மால் அறிய முடிகிறதென்றால், அதற்கு தொல்லியலே முழுமுதல் காரணம்.
உயிரோடு புதைந்த வரலாற்று உருக்கம்!
சிவகங்கை அரசு கல்லூரி பேராசிரியர் தங்க முனியாண்டி “அந்தக் காலத்தில் 150 வயது வரையிலும் மனிதர்கள் வாழ்ந்திருக்கின்றனர். சுமார் 130 வயதில், உடல்ரீதியாகப் பலவீனப்பட்டதும், இனியும் தங்களை உயிரோடு வைத்து உறவினர்களால் பராமரிக்க முடியாது என்பதை அறிந்து, தாழிகளில் உயிருடன் புதைத்துவிட வேண்டும் என்று அவர்களே விரும்பி கேட்டுக்கொண்டு, புதைந்த வரலாறெல்லாம் உண்டு. தற்காலத்தில் என்ன நடக்கிறது? 60 வயது ஆனாலே மரண பயம் வந்துவிடுகிறது. பெற்ற பிள்ளைகள் நல்ல நிலையில்தான் இருக்கிறார்கள். ஆனால், நல்லபடியாக நம்மைக் காப்பாறுவார்களா? என்ற சந்தேகம் வந்துவிடுகிறது. பெற்ற பிள்ளைகளுக்கு உடல் நலிவுற்ற நிலையில் சுமையாக இருக்கக்கூடாது என்று உயிரோடு புதைக்கச் சொன்ன காலம் எங்கே? பெற்ற பிள்ளைகள் கைவிட்டு விடுவார்களோ? மரணம் வந்துவிடுமோ? என்று பயந்து நடுங்கும் காலம் எங்கே? மனிதர்களின் வாழ்க்கையில்தான் எத்தனை வித்தியாசம்?” என்று வியக்கிறார் அவர்.
தோண்டிப் பார்ப்பது பொருள்கள் அல்ல; மனிதர்கள்!
பண்டைய தமிழகத்தில் இறந்தவர்களின் உடல்களை வைத்து மண்ணில் புதைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட புதைகலன்கள், ஈமத்தாழிகள் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. எப்படியென்றால், ஒருவர் இறந்ததும், அவரது உடல் அல்லது எலும்புகளை, அவர் பயன்படுத்திய பொருட்களுடன் ஒரு தாழியில் வைத்துப் புதைத்துவிடுவர். இதுபோன்ற தாழிகள் தமிழகத்தில் பல இடங்களில் கிடைத்துள்ளன.
பிரிட்டன் ராணுவ அதிகாரியும் தொல்லியல் ஆய்வாளருமான சர் எரிக் மார்டிமர் வீலர், இந்திய அகழாய்வுகளின் தந்தை என்று போற்றப்படுகிறார். அவர் “தொல்லியல் ஆய்வாளர்கள் தோண்டிப் பார்ப்பது பொருள்களை அல்ல; மனிதர்களை. ஆய்வாளர்களால் கையாளப்படக்கூடிய சிறு துண்டுகளும் பகுதிகளும் உயிரோட்டமானவை. தொல்லியல் ஒரு அறிவியல். இது, மனிதகுலத்துடன் தொடர்புபடுத்தி செயல்படுத்தப்பட வேண்டிய ஒன்று.” என்கிறார்.
தொல்லியலானது, கடந்த காலங்களில் நிகழ்ந்த கலாச்சாரப் பழக்கம் மற்றும் மனித நடத்தை பற்றிய ஆய்வாக இருக்கும்போது, விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோவில் பகுதியில், சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழிகளின் ஓடுகள் கிடைத்துள்ளன. அதனைத் திட்டமிட்டே பொக்லைன் இயந்திரத்தைக்கொண்டு சேதப்படுத்தியிருக்கின்றனர். ஏன் தெரியுமா?
தமுஎகச மாநிலக்குழு உறுப்பினரான நித்தியானந்தம் நடந்ததை விவரிக்கிறார் -
“மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையின் மேல்புறத்தில், மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில், காவலர் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படும் விழுப்பனூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட எல்லையில், பழமையான முதுமக்கள் தாழிகள் நிறையப் புதைந்திருப்பது தெரிய வந்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன் இந்தப் பகுதியில் குடியிருப்புகள் இருந்ததற்கான தடயங்கள் தெரிந்தன. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தினர் முன் முயற்சியெடுத்து, பேராசிரியர்களை வரவழைத்து, இரண்டு நாட்கள் ஆய்வு நடத்தப்பட்டது.
இப்பகுதியில் பல இடங்களிலும் முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்டு, அவற்றின் மீது கற்பாறைகள் அடுக்கப்பட்டுள்ளன. அங்கங்கே மூன்றுவிதமான ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. முதுமக்கள் தாழிகளின் ஓடுகள், சுமார் 2 அங்குலம் கனத்தில் செம்மண் மற்றும் கரிசல் மண் கலந்து இரண்டு அடுக்குகள் கொண்டதாக உள்ளன. ஒரு அங்குலம் இரண்டு அங்குலம் கனம்கொண்ட வண்ணம் தீட்டப்பட்டு, பூ வேலைப்பாடுகளுடன் மெருகேற்றப்பட்ட ஓடுகள் இந்தப் பகுதியில் சிதறிக் கிடக்கின்றன. இங்கு கிடைத்த சில கற்கள், 300 கிராமிலிருந்து அரை கிலோ வரை, அதிக எடை கொண்டவையாக இருக்கின்றன. அவை, இரும்புத்தாது கலந்து சுட்ட மண்ணால் செய்யப்பட்டவை போல் உள்ளன. அந்தக் காலத்தில், இந்தப் பகுதியில் உலோக ஆலைகள் இருந்திருக்கக்கூடும். அதன் அடையாளங்களை இங்கே காண முடிகிறது.
இந்தப் பகுதியில், 4.05 ஏக்கர் பரப்பளவு நிலம் கையகப்படுத்தப்பட்டு, ரூ.3 கோடியே 57 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில், புதிய வட்டார போக்குவரத்துக் கழக அலுவலக கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜையானது, கடந்த மார்ச் 3-ஆம் தேதி, ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா முன்னிலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியால் தொடங்கி வைக்கப்பட்டது.
அந்த இடத்தில், முதுமக்கள் தாழி ஓடுகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. அதனால், தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த வந்தனர். ஆனால், அந்தப் பகுதியை முழுவதுமாகப் பார்வையிடவில்லை. காரணம் – ஆட்சியாளர்கள் தந்த நெருக்கடிதான்.
அகழ்வாராய்ச்சி நடத்தும் அளவுக்கு விவகாரம் பெரிதாகிவிட்டால், கட்டடம் கட்ட முடியாமல் போய்விடும் என்பதை அறிந்த ஒப்பந்தகாரர்கள், அந்த இடத்தை வேகவேகமாக பொக்லைன் எந்திரம் கொண்டு சீர்திருத்தினார்கள். தொல்லியல் ஆதாரங்களைச் சேதப்படுத்தினர். ஆய்வு நடத்த வந்த தொல்லியல் துறை மண்டல உதவி (பொறுப்பு) இயக்குநர் சக்திவேல், “அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டுமென்றால், அந்த பூமி அப்படியே இருக்க வேண்டும். ஒருமுறை சீர்திருத்தம் செய்துவிட்டால், அந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி நடத்த முடியாது. அதனால், சீர்திருத்தம் செய்த இடத்தை விட்டுவிட்டு, மற்ற பகுதிகளை வேண்டுமானால், அகழாய்வுக்கு உட்படுத்துவோம் என்று ஆட்சியாளர்களின் எண்ண ஓட்டத்தையே பிரதிபலித்தார்.
இங்கு மம்சாபுரம் குறவன் கோட்டை, மங்காபுரம், கிருஷ்ணன் கோவில், விழுப்பனூர், காவத்தோப்பு பேச்சியம்மன் கோவில் மற்றும் வடசேரி கண்மாய் பகுதிகளில் முதுமக்கள் தாழிகள், பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் தொல்லியல் ஆதாரங்கள் பெருவாரியாகப் புதைந்து கிடக்கின்றன. எனவே, இந்தப் பகுதியில் விரிவான முறையில் அகழாய்வு செய்வதன் மூலம், ஸ்ரீவில்லிபுத்தூர் பிரதேசத்தில் வாழ்ந்த தமிழர்களின் தொல் நாகரிகத்தையும், பண்பாட்டையும் வெளிக்கொண்டுவர முடியும். அதனால், இந்த விஷயத்தை தொல்லியல்துறை ஆணையர் உதயச்சந்திரனிடம், வலுவான கோரிக்கையாக நேரில் முன்வைப்பதற்கு ஆயத்தமாகி வருகிறது தமுஎகச.” என்றார்
அகழாய்வைக் காட்டிலும் அரசுக் கட்டடம் பெரிதா?
சிந்துவெளி நாகரிகம் மட்டும்தானா? வைகை கரையிலும் நாகரிகம் இருந்திருக்கிறது. தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில், கீழடி அகழாய்வில் சான்றுகள் கிடைத்துள்ளன. அகழாய்வு மேற்கொள்ள வேண்டிய இடமாக ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகள் உள்ளன.
“புதிதாக வட்டார போக்குவரத்துக் கழக அலுவலக கட்டடம் கட்டுவதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் வேறு இடமா இல்லை? அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டிய வரலாற்று சிறப்புமிக்க இடத்திலா கட்ட வேண்டும்?” என்பது இங்கு ஆய்வு நடத்திய பேராசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஆதங்கமாக இருக்கிறது.
தமிழக அரசுக்குப் பளிச்சென்று புரியும் விதத்தில், இந்த விவகாரத்தை நச்சென்று இப்படிச் சொல்கிறார்கள் சிலர் -
“பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?”