Skip to main content

ஓ.பன்னீர்செல்வம் கை ஓங்கிவிடக் கூடாது! -விருதுநகரில் வெடித்த தென்மாவட்ட அரசியல்!

Published on 21/04/2020 | Edited on 21/04/2020

“நல்ல காரியம்கூட அரசியல் கண்ணோட்டத்தில் கெட்டதாகவே பார்க்கப்படுகிறது. விருதுநகரிலுள்ள ஆளும்கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளே, இதற்கு உதாரணம்.” என்று விருதுநகரில் அதிமுக சீனியர் ஒருவர் நம்மிடம் புலம்பிய நேரத்தில், கணேஷ் கண்ணன் என்பவர் “நல்லவர்களுக்கு இதுதான் கதியா?” என்றும், “கட்சிக்குள் இவ்வளவு கடும் கோபம் எதற்கு? கட்சியை வளர்ப்பதற்கா? கட்சியை அழிப்பதற்கா? நமது கட்சியில் அரசியலை வைத்து சம்பாதித்தவர்களெல்லாம் ஒதுங்கிவிட்டார்கள். இவரோ, வியாபாரத்தில்  சம்பாதித்த பணத்தை ஏழைகளுக்காக செலவழிக்கிறார்.” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 


 

Thangaraj with OPS



யார் அந்த நல்லவர்? என்ன நல்ல காரியம் செய்தார்?
 

விருதுநகரில் பிறந்து கோவையில் தொழில் செய்துவரும் கோகுலம் தங்கராஜ் என்பவர், 2018-ல் விருதுநகரிலுள்ள நிறைவாழ்வு நகர் என்ற இடத்தில், தன் சொந்த செலவில்  ரூ.50 லட்சம் மதிப்பீட்டில்,  பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பாலம் கட்டிக் கொடுத்தார். அப்போது, 'கட்சி சார்பற்ற இளைய தலைமுறை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை உருவாக்கி, பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். 
 

தற்போது, ‘விருதுநகர் முனிசிபாலிடி சேர்மன் சீட் உங்கள் மனைவி மாலா தங்கராஜுக்குத்தான்..’ என்று அதிமுக தரப்பில் உத்தரவாதம் அளித்திருக்கும் நிலையில், இந்த ஊரடங்கு நேரத்தில், விருதுநகரின் அத்தனை வார்டுகள் மீதும் கரிசனம் கொண்டு,   நிவாரண உதவிகளை நேரடியாக வழங்க ஆரம்பித்தார் தங்கராஜ்.  இது,   ‘அமைதிப்படை அமாவாசை’ ரேஞ்சுக்கு பேசப்படும் உள்ளூர் அதிமுக நிர்வாகி ஒருவருக்கு பிடிக்கவில்லை.  ‘அடுத்த சேர்மன் தனது கைக்குள் அடங்கியவராக இருக்கவேண்டும்’ என்று ஒருவரது மனைவியை மனதுக்குள் தேர்வு செய்துவிட்டு, தங்கராஜுக்கு எதிராக தொடர்ந்து அரசியல் செய்து வருகிறார். 

 

Nakkheeran app


 

‘அமாவாசை’ தரப்பினர் தூண்டுதலின் பேரில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம், கோகுலம் தங்கராஜ் மீது புகார் அளிக்கப்பட்டது. ‘ஊரடங்கு விதிகளை மீறி விடுதி ஒன்றில் தங்கியபடி, அதிமுகவினரை வைத்து தங்கராஜ் கூட்டம் நடத்துகிறார். ஊருக்குள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். திருப்பூருக்கும், விருதுநகருக்கும் அடிக்கடி தங்கராஜ் வந்து செல்வது எப்படி?’ என்று புகாரில் கேள்வி எழுப்ப, “சரி.. நீங்க கிளம்புங்க..” என்று விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தங்கராஜுவை அறிவுறுத்தி அனுப்பியிருக்கிறது.   
 

நாம் கோகுலம் தங்கராஜுவை தொடர்புகொண்டோம். “எதிர்கட்சியினர் என்றால் மோதிப்பார்க்கலாம். ஏழைகளுக்கு நல்லது செய்வதை சொந்த கட்சியிலேயே எதிர்க்கிறார்கள். என்ன செய்வது? அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே எனக்கு இருந்ததில்லை. 2017-ல் இருந்தே, இங்கே விருதுநகரில் ஆர்.ஆர்.நகர், கல்போது, கன்னிசேரி புதூர் போன்ற பகுதிகளில், மக்கள் நலத்திட்டங்களை என்னால் முடிந்த அளவுக்கு செய்து வருகிறேன். என்னை வெளியூர்க்காரன் என்று யாரும் சொல்ல முடியாது. இங்குதான் பிறந்து வளர்ந்தேன்.  என்னை கட்சிக்கு கொண்டுவந்தது பிடிக்கவில்லை என்றால் அமைச்சரிடமே நேரடியாக சொல்லியிருக்க வேண்டியதுதானே? மக்களுக்கு கொடுப்பதை தடுக்கும் அரசியலை ஏன் பண்ண வேண்டும்?” என்று வருத்தப்பட்டார். 
 

“துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகவும் நெருக்கமானவர் தங்கராஜ். பந்தா பேர்வழி போல தெரிவார்.    விருதுநகர் நகராட்சிக்கான தேர்தலில், தன் சொந்தப்பணத்தை வாக்காளர்களுக்கு வாரியிறைத்து வெற்றி பெறக்கூடியவர் என்ற அடிப்படையில்தான், அவரது மனைவிக்கு சேர்மன் சீட் என்று சொல்லி களத்தில் இறக்கிவிட்டனர்.  தங்கராஜுவுக்கு எதிராக சிலர் கிளம்பியிருப்பதை, ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான அரசியலாகவே பார்க்க வேண்டியதிருக்கிறது. தென் மாவட்டத்தில் ஓ.பி.எஸ். கை ஓங்கிவிடக்கூடாது என்று முளையிலேயே கிள்ளி எறியப் பார்க்கின்றனர்.” என்றார் அந்த சீனியர்.  
 

அரசியலில் எல்லாமே ஒரு கணக்கோடுதான் நடக்கிறது!
 

 

 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.