தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் அழைத்துச் சென்றனர்.
காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலிசார் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்கும் பதிவும் செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தனர். இந்நிலையில் இதுதொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஆளூர் ஷாநவாஸ், நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
தூத்துக்குடியில் இரண்டு வணிகர்கள் சிறையில் இருக்கும் போது மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்கள். ஊரடங்கை மீறி கடையை நீண்ட நேரம் திறந்து வைத்திருந்ததால் அவர்களைக் கைது செய்தததாக போலிஸ் கூறுகிறது. அவர்கள் குடும்பத்தின் தரப்பில் காவலர்கள் அவர்களை முரட்டுத்தனமாக அடித்தார்கள், அதை நேரில் பார்த்த சாட்சிகள் இருக்கிறார்கள், எங்களுக்கு நீதி வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள். அரசாங்கமும் இந்தக் குற்றச்சாட்டுக்கு உள்ளான காவல்துறை அதிகாரிகள் சிலரை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள். சிலரை பணியிடை மாற்றம் செய்துள்ளார்கள். இந்தச் சம்பவத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று. காவலர்கள் அவர்களை வேண்டுமென்றே கொடூரமான முறையில் தாக்கியுள்ளார்கள். ஐந்து நிமிடம் கடையை மூட நேரமானால் காவல்துறை இப்படிதான் நடந்துகொள்வார்களா? போலீசிடம் சமீப நாட்களில் யாரும் அத்துமீறி பேசவில்லையா, ஹெச். ராஜா பேசினாரே, வாய்க்கு வந்தெல்லாம் அவர் கூறினாரே. பணம் வாங்கிக்கொண்டு காவலர்கள் நடப்பதாகக் குற்றஞ்சாட்டு வைத்தாரே? நீதிமன்றத்தை அவமதித்துப் பேசினாரே, அதற்கெல்லாம் என்ன நடடிக்கை எடுக்கப்பட்டது. காவல்துறையை வாயில் வந்த வார்த்தைகளைக் கொண்டு பேசினாரே, போலீசே ஊழல்வாதிகள், காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது என்றெல்லாம் கூறினாரே, இதற்காக அவர் கைது செய்யப்பட்டாரா?
என்ன செய்தீர்கள் நீங்கள், அவருக்குக் லத்தியைக் கொண்டு எதாவது தொந்தரவு கொடுத்தீர்களா? அண்ணாச்சி, அண்ணாச்சி என்று காலில் விழாத குறையாகக் கெஞ்சினீர்களே! தனிப்படை அமைத்து ஹெச். ராஜாவை தேடுகிறார்கள் என்று சொன்னார்கள். பத்திரிகையில் வந்த செய்தியை வைத்துக்கொண்டு இந்து முன்னணியினர் ஹெச்.ராஜாவை மேடையில் வைத்துக்கொண்டே அந்த பேப்பரை காட்டி சிரித்தார்கள். வேறு என்ன நடவடிக்கை அவர் மீது எடுத்தீர்கள். அவர் மீது நடவடிக்கை எடுப்பதை யார் தடுத்தது. காவலர்களுக்கு யார் அழுத்தம் கொடுத்தது. அப்பாவி மக்கள் என்றால் ஒரு சட்டம், அரசியல் செல்வாக்குப் படைத்தவர்கள் என்றால் மற்றொரு சட்டமா, சட்டம் அனைவருக்கும் ஒன்றுதானே? காவல்துறையினர் ஏன் இப்படிப் பாகுபாடு காட்டுகிறார்கள். இது நல்லதல்ல, நீதிமன்றத்தின் முன் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் பதில் சொல்ல வேண்டிய காலம் வரும். உயிரிழந்தவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.