நாடாளுமன்றத் தேர்தல், ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அந்த வகையில், தி.மு.க. அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது. அதில், திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை எதிர்த்து மதுரை மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க கட்சி சார்பில் மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளர் சரவணனன் தேர்தல் பிரச்சாரத்தின் போது, நமது நக்கீரனுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தான் மக்களை நேரடியாக சந்தித்திருக்கிறீர்கள். அந்த அனுபவம் எப்படி இருந்தது?
“2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நடைபெற்ற அதிமுக வேட்பாளர், தேர்தல் முடிவு வருவதற்கு முன்பாகவே இருந்து விடுகிறார். அப்போதுதான் அந்த இடைத்தேர்தல் வருகிறது. அந்த நேரத்தில் அந்தத் தொகுதியில் போட்டியிடக் கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு அமைகிறது. பொது வாழ்க்கையில் நான் ஏற்கனவே இருப்பதனால் தேர்தல் என்ற தனிப்பட்ட பதற்றம் எனக்கு இருந்தது கிடையாது. அதிலும் திருப்பரங்குன்றம் தொகுதி என்பது எனது சொந்த தொகுதி. அதனால் அந்தத் தொகுதி எனக்கு பரீட்சையப்பட்ட தொகுதி என்பதனால், எனக்கு பெரிய வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை.
ஆனாலும், அந்தத் தேர்தலில் எனக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்தச் சட்டமன்ற உறுப்பினர் மறைவுக்குப் பிறகு மீண்டும் இடைத்தேர்தல் வருகிறது. எனக்கு அதே தொகுதியில் மீண்டும் வாய்ப்பு அமைகிறது. அந்தத் தேர்தலில் 2500 ஓட்டுகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றேன். அந்த வெற்றி, என்னுடைய மக்கள் சேவை மக்கள் மனதில் வெகுவாக கவர்ந்திருக்கிறது என்ற அறிவுரையாகத்தான் நான் பார்க்கிறேன். அந்தக் காலகட்டத்தில் தான் கொரோனா நோய் வந்தது. அதிலும் கூட மக்களிடம் நேரடியாக சென்று களப்பணியாற்றினேன்”
2019-ல் இருக்கக்கூடிய கூட்டணி 2024லிலும் வலுவாக இருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்களே?
“இது சந்தர்ப்பவாத கூட்டணி தானே. இங்கே காங்கிரசுடன் அரவணைத்திருக்கக்கூடிய கம்யூனிஸ்ட், கேரளாவில் பிரிந்திருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் காரரும், காங்கிரஸ் காரரும் ஒரு கட்டத்தில் தோள் மேல் கை போட்டு ஒரு சேர சென்று கொண்டிருப்பார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் இருவரும் சண்டை போட்ட மாதிரி பிரிந்து செல்வார்கள். அந்த மாதிரி அவர்கள் நாடகம் ஆடுகிறார்கள். அதே போல், பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க இரட்டை வேடம் போடுகிறது. இதை நான் மட்டும் செல்லவில்லை ஒட்டுமொத்த மக்களும் சொல்கிறார்கள்”
2021 சட்டமன்றத் தேர்தலில் ராம ஸ்ரீநிவாசனுக்கு வாய்ப்பு தராமல் உங்களுக்கு வாய்ப்பு தருகிறார்கள். ஆனால், இப்போது மக்களவை தேர்தலில் உங்களை எதிர்த்து ராம ஸ்ரீநிவாசன் பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறாரே?
“நான் இடைத்தேர்தலில் நிற்கும் போது கூட எனக்கு எதிராக அவர் பாஜகவின் வேட்பாளராக இருந்தார். நான் அங்கு வாங்கிய ஓட்டு 70,000க்கும் மேல், ஆனால் அவர் வாங்கி ஓட்டு 7,000க்கும் மேல்தான். பாஜக கட்சி என்பது தமிழகத்தில் புறக்கணிக்கப்பட்ட கட்சி. அவர்கள் ஒரு வன்மமான அரசியலை செய்யக்கூடிய ஒரு இயக்கமாகத்தான் தமிழகத்தில் பார்க்கிறார்கள். இதனால் தமிழ்நாட்டில் அவர்களுக்கு எதிர்காலம் இல்லை. இதன் காரணமாக அவர் இந்தத் தேர்தலில் போட்டியிட ஆசைப்படுகிறார், நிற்கட்டும். ஏனென்றால் விருதுநகரில் வேலை பார்த்தார், அங்கே கிடைக்கவில்லை. திருச்சி தொகுதியில் போட்டியிடுவோம் என்று சொன்னார். ஆனால். அங்கே ஒருத்தர் விரட்டி விட்டார். அதனால் அவர் மதுரை மண்ணுக்கு திரும்பி விட்டார். எல்லோருக்கும் அடைக்கலம் தரக்கூடியது மதுரை மண். ஆனால் அன்னை மீனாட்சியின் தீர்ப்பு தெளிவாக இருக்கும். அதனால், பா.ஜ.க மதுரையில் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள், தமிழ்நாட்டிலும் வர முடியாது”.
கோவையில் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, தென் மாநிலங்களில் பாஜக கூட்டணி மிகவும் நன்றாக இருக்கிறது என்றும், மிகப்பெரிய வெற்றி உண்டு என்றும் என ட்விட்டரில் பகிர்ந்து கொண்டாரே?
“அதாவது எண்ணிக்கையை வைத்து எதையும் சொல்ல முடியாது. தேசிய பறவை மயிலின் எண்ணிக்கை விட காகத்தின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அந்த மாதிரி பா.ஜ.க கூட்டணி இருக்கக்கூடிய எந்தக் கட்சித் தலைவர்களும் ஒரு நபராக தான் இருப்பார்கள். அதனால் அவர்களுக்கு வாக்கு வங்கி கிடையாது. மறைந்த எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் புகழ்ந்து பேசினால் மக்கள் மனமாறி நமக்கு வாக்களிப்பார்கள் என்ற எண்ணத்தில் பிரதமர் மோடி பேசி வருகிறார். தி.மு.கவை புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் இருக்கிறார்கள். இந்த வாக்குகளை எப்படியாவது நாம் வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடி, ஜெயலலிதாவையும் எம்ஜிஆரையும் பாராட்டி இருக்கிறார். எங்களுடைய கட்சித் தலைவரையும், தலைவியையும் பாரதப் பிரதமரே பாராட்டி இருப்பது எங்களுக்கு பெருமை தான்” என்று கூறினார்.