Skip to main content

'பப்பு' ராகுல் இப்போ 'டாப்பு' அண்ணன் மோடி 'டூப்பு' !

Published on 11/12/2018 | Edited on 18/02/2019
tamilisai soundararajan

 


"வெற்றிகரமான தோல்வி" என்ற ஒரு பன்ச் லைனை அக்கா தமிழிசை  'கண்டுபிடித்தது' அழகு. ஆனால், அதற்கு மோடி கொடுத்த விலை தான் பெரிது.
 

இப்படி தான் காங்கிரசின் சரிவும் கடந்த காலத்தில் ஆரம்பித்தது. அதே நிலை தான் இப்போது பாரதிய ஜனதாவிற்கும். காங்கிரசின் சரிவு ஊழல் குற்றச்சாட்டுகளால் ஆரம்பித்தது. 2 ஜி ஊழல் என்றும், நிலக்கரி சுரங்க ஊழல் என்றும் பா.ஜ.க மிகப் பெரிதாக ஊதி பெருக்கியது. அதனால் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. ஆனால் பா.ஜ.க கூறிய, அந்த காங்கிரசின் ஊழல்களால், மக்களுக்கு நேரடி பாதிப்பில்லை.
 

இப்போது பா.ஜ.க மீது வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் மிகப் பெரிய அளவில் மக்களை சென்றடையவில்லை. ஆனாலும் பா.ஜ.க தோல்வி அடைந்திருக்கிறது. காரணம், மோடி தான். மோடியின் நடவடிக்கைகள், மக்களை நேரடியாக பாதித்தது தான் காரணம்.
 

அய்ந்து மாநிலத் தேர்தல்களை  அலசினால், சில செய்திகள் கிடைக்கும். 

மிசோரமில் இரண்டு முறையாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியை இழந்திருக்கிறது. இது கிட்டத்தட்ட ஆட்சிக்கு எதிரான மக்கள் மனநிலை. காங்கிரஸ் அரசில் முதல்வராக இருந்த லால் தன்வாலாவே, அவர் போட்டியிட்ட இரண்டுத் தொகுதிகளிலும் தோல்வி அடைந்துள்ளார் என்பது இதனை உறுதிப்படுத்துகிறது.

 


தெலுங்கானாவில் கடந்த முறை ஆண்ட தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. கடந்த முறையை விட கூடுதலாக தொகுதிகளை கைப்பற்றியுள்ளது டி.ஆர்.எஸ். காங்கிரஸ் இரண்டு இடங்களை இழந்திருக்கிறது. பா.ஜ.க நான்கு இடங்களை இழந்து, ஒரு இடத்தில் மாத்திரமே வெற்றிப் பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு முழு முதல் காரணம், டி.ஆர்.எஸ் கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் தான்.  இன்னும் ஆறு மாதங்களுக்கு ஆட்சிக்காலம் இருந்த போதும், சட்டசபையை கலைத்து விட்டு தேர்தலை சந்தித்தார். எதிர்பாரா திருப்பமாக நேரடி விரோதிகளான காங்கிரஸும், தெலுங்கு தேசமும் கைக்கோர்த்தன. ஆனாலும் கடந்த முறையைவிட அதிக வெற்றியை ஈட்டியுள்ளார் ராவ். சொல்லி அடித்திருக்கிறார். தெலுங்கானா, தனி மாநிலமாக உருவாக தொடர்ந்து போராடி, பெற்றுக் கொடுத்த இமேஜ் இன்னும் வலுவாக இருக்கிறது சந்திரசேகர் ராவ்க்கு. 
 

மிசோரமும், தெலுங்கானாவும் பா.ஜ.கவுக்கு பெரிய பாதிப்பு கிடையாது. காரணம். அது அவர்களது களம் அல்ல. அதனால் லாபம் இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.


ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்திஸ்கர் மாநிலங்கள் தான் இப்போது பா.ஜ.கவுக்கு தலைவலியாக மாறியுள்ளன. காரணம், அது அவர்களது களம். இந்துத்துவா பிரச்சாரம்
எடுபடக்கூடிய, இந்தி பெல்ட். அத்தோடு இந்த மாநிலங்கள் பா.ஜ.க ஆட்சியின் கீழ் இருந்தவை. 


இதில் ராஜஸ்தான் கதை வேறு. கேரளா, தமிழ்நாடு போல ஒவ்வொரு முறை ஒரு கட்சியை ஆட்சியில் அமர்த்துவது ராஜஸ்தான் மாநில மக்களின் தேர்தல் வழக்கம். அதனால் இந்த முறை அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அத்தோடு மாநில முதல்வர் வசுந்தரா ராஜே தன் செயல்பாடுகளால் தினம் ஒரு பிரச்சினையை தேடிக் கொள்பவர். அதனால் வசுந்தரா ராஜே முயற்சியாலும், சச்சின் பைலட்டின் மாநிலத் தலைமையாலும் ஒரு ஆட்சி மாற்றம் வந்து சேர்ந்திருக்கிறது. இதிலும் பிரதமர் மோடியின் பங்கு இருந்தாலும், அது
துருத்தி தெரியும் அளவில் இல்லை.


ஆனால், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநில தோல்விகள் பிரதமர் மோடிக்கு பெரும் பங்கு இருக்கிறது என்பதை அறைந்து சொல்லி இருக்கின்றன. சத்தீஸ்கர் மாநிலத்திலும், மத்தியப்பிரதேசம் மாநிலத்திலும் பா.ஜ.க மூன்று முறையாக ஆட்சியில் இருந்து, இழந்திருக்கிறது. அதனால் தான் இது கவனிக்கப்பட வேண்டிய தோல்வி.
 

சத்தீஸ்கரில் ராமன் சிங் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சர். கருத்துக் கணிப்பில் ராஜஸ்தானில் பா.ஜ.க தோல்வி என்ற செய்தி இருந்தது. சத்தீஸ்கரில் பா.ஜ.க தோல்வியுற்றாலும் இழுபறியாகத் தான் இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் பா.ஜ.க படு அடியாகத் தோற்றுப் போயிருக்கிறது. முதல்வர் ராமன் சிங் மீது பெரிய அளவிலான குற்றச்சாட்டுகளோ, பிரச்சினைகளோ இல்லை. காங்கிரஸுக்கு முதல்வர் வேட்பாளர் இல்லை. காங்கிரஸ் வெற்றியை பாதிக்க பகுஜன் சமாஜ் கட்சியும், அஜித் ஜோகியின் கட்சியும் தனித்துப் போட்டியிட்டன. ஆனாலும் இவற்றை எல்லாம் தாண்டி, காங்கிரஸ் அமோக வெற்றிப் பெற்றுள்ளது. காரணம், மோடி தான்.


மத்தியப் பிரதேசத்தின் நிலை இன்னும் நுணுக்கமாக ஆராயப்பட வேண்டியது.

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் 2005 ஆம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்றவர் சிவராஜ் சிங் சௌகான். இதுவரை மூன்று முறை ஆட்சி அமைத்துள்ளார். 2005க்கு முன்பு அய்ந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மக்களின் நாடிதுடிப்பை அறிந்தவர். இவர் ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு சேர்த்தவர். மாநிலத்தில் பெரிய முன்னேற்றம் இல்லாவிட்டாலும், ஒரு மக்கள் தொடர்புள்ள மனிதர் என்ற இமேஜோடு வலம் வந்தவர். வியாபம் ஊழல் என்ற மாபெரும் கறை இருந்தாலும், மக்கள்  இவரைத் தொடர்ந்து தேர்ந்து எடுத்து வந்தனர். இவர் இப்போது ஆட்சியை பறிக்கொடுத்திருக்கிறார்.


இழுபறியான முடிவு தான் என்று சில விவாதங்கள் இருக்கத் தான் செய்கின்றன. ஆனால் மத்தியப்பிரதேசம் பா.ஜ.க செல்வாக்கிற்கான காரணம் தெரிந்தால், இதன் அடிப்படை விளங்கும். 


மத்தியப்பிரதேசத்தின் ஆட்சியை பிடித்ததில் இருந்து ஒரு சிறப்பான பணியை செய்ய ஆரம்பித்தது பா.ஜ.க. அரசு வேலைகளுக்கு, பா.ஜ.கவினர் முன்னுரிமைப் பெறும் வேலைகளை செய்தார்கள் மறைமுகமாக. வியாபம் ஊழலின் ஒரு பகுதி இது தான்.  அடுத்து அதிகாரத்தின் உச்சத்தில் ஆர்.எஸ்.எஸ் சார்பானவர்களே அமர்த்தப்பட்டார்கள். அதனால் ஆர்.எஸ்.எஸின் பிடி கண்ணுக்கு தெரியாமல் ஆட்சியை இறுக்கிப் பிடித்திருந்தது. இதன் காரணமாக, ஆட்சியின் பயன்கள் ஆர்.எஸ்.எஸ் விரும்பியவர்களுக்கே சென்றடைந்தது. அது தேர்தலில் பலன் கொடுத்தது. அதனால் மூன்று முறை தொடர்ந்து ஆட்சி.


அடுத்து 2003 ஆம் ஆண்டு ஆட்சியை இழந்த காங்கிரஸ், தொடர் தோல்விகளால் பலமிழந்துப் போனது. இதனால், கிராம அளவிலான அமைப்புகள் கலகலத்துப் போனது. அந்த வலுவான பா.ஜ.கவும், தொய்வுற்ற காங்கிரஸும் மோதி இந்த வெற்றியை காங்கிரஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

மத்தியில் பா.ஜ.க ஆட்சியில் இருப்பதும், மோடி பிரதமராக இருப்பதும் மத்தியப்பிரதேசம் தேர்தலில் பெரும் பலமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்தத் தோல்வி கிடைத்துள்ளது. 


ஆர்.எஸ்.எஸ் பிடியை மீறி, சிவராஜ் சிங் சௌகானின்  இமேஜை காலி செய்து பா.ஜ.க மத்தியப் பிரதேசத்தை இழந்ததற்கு காரணம், அய்யா மோடி அவர்கள் தான்.


 


பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜி.எஸ்.டி வரிவிதிப்பும் 'தக்க விளைவை' கொடுத்து விட்டது. ஆம், அதன் பாதிப்பால் தான் மோடியின் பிரச்சாரம் தோல்வி அடைந்திருக்கிறது. அறிவித்த அத்தனை அறிவிப்புகளும் வெற்று மாயை என்பது மக்களுக்கு மெல்ல, மெல்ல விளங்கி வருகிறது. இதனால், மோடி தான் இன்றைய பா.ஜ.க தோல்விக்கு முழு காரணம். 


மிசோரம் ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதியை கொண்டது. அது காங்கிரஸ் வசம் இருந்தது. இது வரும் தேர்தலில், பறி போகலாம். இந்தத் தோல்வி காங்கிரசிற்கு பெரிய இழப்பு இல்லை. 


தெலுங்கானாவில் 17 நாடாளுமன்ற தொகுதிகள். அதில் 11 டி.ஆர்.எஸ்ஸிடமும், 2 காங்கிரசிடமும் இருக்கின்றன. வரும் தேர்தலில், பெரும்பான்மை தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி வசம் தான் செல்லும், பா.ஜ.கவிற்கு லாபமிருக்காது.


ஆனால் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் 65 நாடாளுமன்றத்  தொகுதிகள். 


2014 ஆம் ஆண்டு தேர்தலில் மத்தியப்பிரதேசத்தில் இருக்கும் 29 தொகுதிகளில், 27 தொகுதிகள் பா.ஜ.க வசம் சென்றது.  இரண்டு தான் காங்கிரசுக்கு கிடைத்தது. 


ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25 தொகுதிகளையும் மொத்தமாக பா.ஜ.க அள்ளியது. காங்கிரஸ் பூஜ்யம் பெற்றது. சத்தீஸ்கரில் 11 நாடாளுமன்றத் தொகுதிகள். பா.ஜ.க 10 அய் வென்றது, காங்கிரஸுக்கு ஒன்றுதான்.
 

ஆகவே மொத்த 65 இடங்களில், 62 பா.ஜ.கவிடமும், 3 மட்டும் காங்கிரஸிடம் இருக்கின்றன. இந்த நாடாளுமன்றத் தொகுதிகளில், இந்தத் தேர்தல் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தான் செய்தி. எதுவாக இருந்தாலும் பா.ஜ.கவுக்கு இழப்பு நிச்சயம் இருக்கும், காங்கிரஸுக்கு வரவு இருக்கும். 


பப்பு என மோடியால் விமர்சிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தான் பப்பு இல்லை, "டாப்பு" என நிருப்பித்திருக்கிறார். அமைப்பு வலுவாக இல்லாத இடங்களில் குறிப்பிடத்தக்க வெற்றியை குவித்திருக்கிறார். முழு வெற்றியும் அவரை சாராது என்று சிலர் சொன்னாலும், காங்கிரஸை ஒருங்கிணைத்த பெரும் பணியை செய்து மீட்டெடுத்திருக்கிறார்.


பப்பு என ராகுலை விமர்சனம் செய்த மோடி தான், தான் ஒரு 'டூப்பு" என வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். கையில் இருந்த ஆட்சிகளை காணடித்திருக்கிறார். தோல்விகளை மாநில முதல்வர்கள் தலையில் கட்ட முயற்சி நடக்கும். கடந்த காலங்களில் உள்ளாட்சித் தேர்தல் வெற்றிகளுக்கு கூட "மோடி அலை" தான் காரணம் என்று கூவப்பட்டதை இப்போது நினைவில் இருத்திக் கொண்டால், இந்தத் தோல்விகளுக்கு காரணம் யார் என்பது எளிதில் விளங்கும்.


மொத்தத்தில், வெறும் 'கப்'பை தான் ஆற்றிக் கொண்டிருக்கிறார் மோடி, அதில் 'டீ' இல்லை என்பதை, மோடி மேஜிக்கிற்காக காத்திருந்தவர்கள் உணர்ந்து விட்டார்கள். அதன் டிரெய்லர் தான் அய்ந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் உணர்த்துவது. மெயின் பிக்சருக்காக காத்திருப்போம்!


 

sss 333