Skip to main content

மோடியை இன்னுமா நம்புகிறது பாஜக...

Published on 09/04/2019 | Edited on 09/04/2019

மக்களவை பொதுத்தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் பிரச்சாரங்களும் நாடு முழுவதும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் பாஜக 'சங்கல்ப் பத்ரா' எனும் பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமித்ஷா, அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் 48 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். 
 

2014

 

2014 பொதுத் தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றியை பெற முக்கிய காரணமாக இருந்தது அப்போது வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை. அந்தத் தேர்தல் அறிக்கையின் அம்சங்களைத்தாண்டி வடிவமைப்புடன் 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாஜக வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையின் வடிவமைப்பை ஒப்பிட்டு பார்க்கலாம்.
 

2014ஆம் ஆண்டு பாஜகவின் 52 பக்கம் கொண்ட தேர்தல் அறிக்கையில் 549 உறுதிமொழிகளை அளித்தது. ‘ஏக் பாரத், ஷ்ரெஸ்தா பாரத்’ என்று தலைப்பில் வெளியானது தேர்தல் அறிக்கை. ‘ஒரே பாரதம், சிறந்த பாரதம்’ என்பது இதன் பொருள் ஆகும். தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பாஜகவின் 45 பக்கம் கொண்ட தேர்தல் அறிக்கையில் 75 உறுதிமொழிகள் உள்ளன. ‘சங்கல்பித் பாரத், ஷசாக் பாரத்’ என்று முகப்பில் எழுதப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது தேர்தல் அறிக்கை. பாரதத்திற்கான உறுதிமொழி என்று சொல்லப்படுகிறது.
 

bjp

 

2014 பாஜக தேர்தல் அறிக்கைக்கும் இந்த வருடம் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கைக்குமான வித்தியாசம் அட்டைப்படத்தில் இருந்தே தொடங்குகிறது. 2014 அறிக்கையில் வாஜ்பாய், அத்வானி, ராஜ்நாத் சிங், முரளி மனோகர் ஜோசி ஆகியோர் படங்கள் இடம் பெற்றிருந்தன. அட்டைப்படத்தின் கீழே மோடி, மனோகர் பரிகார், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோரின் படங்களும் அதில் இடம்பெற்றிருந்தன. ஆனால், இந்த வருடம் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் நரேந்திர மோடி ஒருவரின் படம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. காங்கிரஸ் இந்த வருடம் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் அட்டைப் படத்தில் மக்கள் கூட்டத்தை வைத்துள்ளது.
 

ஒரு புறம் ',மோடி அலை ஓய்ந்துவிட்டது' என்று எதிர்க்கட்சிகள் முழங்க இந்த பொதுத் தேர்தலில் பாஜக மீண்டும் மோடியை முன் நிறுத்துவதை பார்த்தால் மோடி அலை மீது தற்போதும் பாஜக நம்பிக்கை வைத்திருக்கிறது அல்லது நரேந்திர மோடிதான் பாஜக என்ற நோக்கில் கட்சி மாறிவிட்டது என்றே தோன்றுகிறது.