முதல்வர் எடப்பாடிக்கும் மந்திரி சி.வி.சண்முகத்திற்குமிடையே நீறுபூத்த நெருப்பாக இருக்கும் பனிப்போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்கிறார்கள் தமிழக அரசின் கனிம வளத்துறையினர். தமிழக ஆறுகளில் அனுமதிக்கப்பட்ட மணல் குவாரிகளை சேகர் ரெட்டி, ரத்தினம், புதுக் கோட்டை ராமச்சந்திரன் கூட்டணிக்கு தாரை வார்த்திருந்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவரது மறைவுக்குப் பிறகு அதே குவாரிக் கூட்டணியை ஆதரித்தார் எடப்பாடி பழனிச்சாமி. மணல் மூலம் கோடிகளில் கொடிகட்டிப் பறந்தது இந்த கூட்டணி. இதனால் வரலாறு காணாத அளவுக்கு மணல் விலை உச்சத்துக்குச் செல்ல, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வீடு கட்டும் கனவு பணால் ஆனது.
இந்த நிலையில், மணல் கொள்ளைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் தமிழகம் முழுவதும் மணல் அள்ள தடை விதித்த நீதிமன்றம், வெளிநாடுகளிலிருந்து மணலை இறக்குமதி செய்துகொள்ள அனுமதித்தது. மேலும் எம் சாண்ட் மணலும் பயன்பாட்டுக்கு வந்தது. மணல் குவாரிகளுக்கு தடை இருந்தாலும் லோக்கல் அதிகாரிகளை கைகளுக்குள் போட்டுக்கொண்டு மணல் கடத்தலை ரகசியமாக நடத்தி வருகின்றது மேற்படி கூட்டணி. வெளிப்படையாக மணல் அள்ளுவது சிரமமாக இருப்பதாலும் மணல் அள்ள தடை நீடிப்பதாலும் சவுடு குவாரிகள் மீது தற்போது சவாரி செய்து வருகின்றனர் மணல் மாஃபியாக்கள். இதில்தான் மந்திரிக்கும் முதல்வருக்கும் முட்டல் மோதல்கள் அதிகரித்து வருகின்றன என்கின்றனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய கனிம வளத்துறையினர், ‘தமிழகம் முழுவதும் சராசரியாக ஒரு நாளைக்கு 70 லட்சம் டன் முதல் 1 கோடி டன் சவுடு மணல் தேவை இருக்கிறது. பல மாவட் டங்களில் கிரானைட் குவாரிகளுக்கான ஏலம் விடப்படாதது போல, சவுடு குவாரிகள் ஏலமும் விடப்படவில்லை. சட்டமன்றம் முடிந்ததும் கிரானைட் குவாரிகளுக்கு ஏலம் விடப்படுவது போல சவுடு குவாரிகளுக்கும் ஏலம் விடப்படவுள்ளது. அதேசமயம் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தஞ்சை, பெரம்பலூர், சேலம் உள்பட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சவுடு குவாரிகள் தற்போது ஜம்மென்று நடந்து கொண்டிருக்கிறது. வட தமிழகத்தில் மணல் குவாரிகளையும் சவுடு குவாரிகளையும் தன் பிடியில் வைத்திருந்த சேகர் ரெட்டி, மணல் குவாரிகளுக்கு தடை நீடிப்பதால் வெளியே வருவதில்லை. அதனால் வட தமிழகத்தி லுள்ள சவுடு குவாரிகளை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை ரத்தினத்திடமும் ராமச்சந்திரனிடமும் கொடுத்துள்ளார் சேகர் ரெட்டி. தற்போது இவர்கள் இருவரும் வைத்ததுதான் சட்டம்.
காஞ்சிபுரத்தில் 5 சவுடு குவாரிகள் இருக்கின்றன. ஒரு குவாரியிலிருந்து 50 நாட்களில் 5000 லோடு சவுடு மணல் எடுக்க மட்டுமே லைசன்ஸ் தரப்படுகிறது. இதற்காக ஒரு லோடுக்கு 780 ரூபாய் அரசுக்கு லைசன்ஸ் எடுத்தவர் கட்ட வேண்டும். ஆனால் சவுடு குவாரி லைசன்ஸ் எடுத்தவர் சவுடுகளை எடுத்து விற்க முடியாது. அந்தளவுக்கு லைசன்ஸ்தாரர்களை மிரட்டி அவர்களை தங்கள் பிடிக்குள் வைத்துக்கொள்வார்கள் மாஃபியாக் கள். இவர்களது மிரட்டலை மீறி லைசன்ஸ்தாரர்களால் எதுவும் செய்ய முடியாது.
ஒரு குவாரியிலிருந்து 50 நாட்களுக்குள் 5000 லோடு சவுடு மணல் மட்டுமே எடுக்க அரசு அனுமதித் திருப்பதால் 5 குவாரிகளிலிருந்து 25 ஆயிரம் லோடு மட் டுமே எடுக்கப்பட வேண்டும். ஆனால், மணல் மாஃபியாக் களால் ஒரு குவாரியிலிருந்து ஒரு நாளைக்கு மட்டுமே சராசரியாக 1000 லோடு ( 3 யூனிட் ) என 5 குவாரிகளி லிருந்து 5000 லோடு சவுடு அள்ளப்படுகிறது. அந்த வகையில், 50 நாட்களில் 25 லட்சம் லோடு எடுக்கின்றனர். லைசன்ஸ் எடுத்த நபருக்கு ஒரு லோடுக்கு 800 ரூபாய் வீதம் 5 குவாரிகளில் அரசு அனுமதித்துள்ள அளவான 25000 லோடுக் கும் கணக்கிட்டு 8 கோடியை கொடுத்துவிடுவார்கள். ஆனால், மணல் மாஃபி யாக்களோ ஒரு லோடு சவுடு மணலை 2000 ரூபாய்க்கு விற்கிறார்கள். அந்த வகையில், 50 நாட்களில் 5 குவாரிகளிலும் அள்ளப்படும் 25 லட்சம் லோடு சவுடு மணலை கணக்கிட்டால் 500 கோடி ரூபாய் மாஃபியாக்களின் பாக்கெட்டுகளுக்கு சேர்கிறது. இதில் லைசன்ஸ்தாரர்களுக்கு தரப்படும் 8 கோடியை கழித்து விட்டால் 492 கோடி ரூபாய் மாஃபியாக்களுக்கு.
ஒரு மாவட்டத்தில் மட்டுமே சுமார் 500 கோடி எனில் சவுடு மணல் அள்ளப்படும் மற்ற மாவட்டங்களையும் கணக்கிட்டால் சராசரியாக மாதத்திற்கு 5000 கோடி ரூபாய் மாஃபியாக்களுக்கு எளிதில் கிடைக்கிறது. அண்மைக்காலமாக மணல் மாஃபியாக்கள் சுட்டிக்காட்டும் நபர்களுக்குத்தான் சவுடு குவாரி கொடுக்கப் படுகிறது. மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் மாஃபியாக்களுக்குள் அடங்கி விட வேண்டும். இந்த சூழலில்தான், இவர்கள் மூலம் எந்த பலனும் இல்லை என்பதால் அவர்களின் ஆட்டத்தை நிறுத்த முயற்சித்தார் சட்டத்துறை அமைச்சரான சி.வி.சண்முகம். கனிம வளத் துறைக்கும் இவர்தான் அமைச் சர். ரத்தினம் மற்றும் ராமச் சந்திரனின் ஆதிக்கம் முதல்வர் எடப்பாடி வரை இருப்ப தால் அமைச்சர் சண்முகத்தை இவர்கள் கண்டுகொள்வ தில்லை.
அதனால் கனிம வளத் துறையில் எது நடப்பதாக இருந்தாலும் முதல்வர் அலுவலகத்துக்கு தகவல் தருவார்கள். அங்கிருந்து வரும் உத்தரவுகளுக்கேற்ப கனிம வளத் துறையினரும் மாவட்ட கலெக்டர் அலுவலகமும் அங்கிருக்கும் ஏ.டி.மைன்ஸ்சும் தலையாட்டுவார்கள். இதனால் அமைச்சர் சண்முகத்தின் உத்தரவுக்கு மாறாகவும் அவருக்குத் தெரியாமலும் பல விசயங்கள் துறையில் நடக்கின்றன. சண்முகம் சொல்கிற நபர்களுக்கு குவாரிகளும் கிடைப்ப தில்லை. அதிகாரிகளோ, "குவாரிகள் விசயத்தில் ரத்தினமும் ராமச்சந்திரனும் சொல்வதை மட்டுமே கேட்கவும் என முதல்வர் அலுவலகத்திலிருந்து உத்தரவிடப்படுவதால் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை' என அமைச்சர் சண்முகத்திடம் ஒப்பித்திருக்கிறார்கள்.
இதனையறிந்து தனது துறையில் தன்னை விட இவர்கள் ஆதிக்கம் செலுத்துவதா? என டென்சனான சண்முகம், ரத்தினத்தையும் ராமச்சந்திரனையும் சென்னையிலுள்ள தனது வீட்டுக்கு அழைத்து மிகவும் மோசமாக கடிந்து கொண்டார். ஆனாலும், அமைச்சரின் சொல்லுக்கு அவர்கள் கட்டுப்பட வில்லை. இது குறித்து எடப் பாடியிடம் சண்முகம் மல்லுக் கட்டியிருக்கிறார். ஆனால், எடப்பாடியிடமிருந்து சரியான பதில் இல்லை என்பதால் அவர் மீது காட்டமாக இருக்கிறார் சண்முகம். மேலும், கனிம வளத்துறைக்கு சண்முகம் அமைச்சராக இருந்தாலும் அத்துறையில் எடப்பாடி தலையிடுவதும் சண்முகத்தால் ஜீரணிக்க முடியவில்லை சட்ட மன்ற கூட்டத் தொடர் முடிந் ததும் இந்த விவகாரம் பூதா கரமாகும்''’ என சுட்டிக்காட்டு கிறார்கள்.
முதல்வருக்கு நெருக்கமான கோட்டை அதிகாரிகள் வட்டாரங்களில் விசாரித்த போது, ராமச்சந்திரன் மற்றும் ரத்தினத்தின் ஆதிக்கம் குறித்து முதல்வர் எடப் பாடியிடம் கேள்வி எழுப்பினார் சண்முகம். குறிப்பாக, "எனது துறையில் முதல்வர் அலுவலகம் தலையிடுவது எனக்கு சரியாகப் படவில்லை. கனிம வளத்துறைக்கு நான் அமைச்சரா? இல்லை அவர்கள் அமைச்சரா? அவர்களி டம் கேட்டால், "சி.எம்.எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார். அதற்கு பல காரணங்கள் இருக்கு. சி.எம். மிடமே கேட்டுத் தெரிந்துகொள் ளுங்கள்' என என்னிடமே அவர் கள் சொல்கிறார்கள். "இதற்கெல் லாம் என்ன அர்த்தம்?' என கேள்வி எழுப்ப, "வேறு எதை வேண்டுமானாலும் கேளுங்கள். செய்கிறேன். ஆனா, அவர்கள் விவகாரத்தில் ஒன்றும் செய்ய முடியாது. கூவத்தூர் விசயத்தில் பெரிய உதவி செய்தவர்கள் அவர் கள். அவர்களால்தான் ஆட்சியே அன்றைக்கு பாதுகாக்கப்பட்டது. "இதெல்லாம் உங்களுக்கு தெரியும் தானே' என சொல்லி சமாதானப் படுத்தியிருக்கிறார் எடப்பாடி. ஆனால், சண்முகம் சமாதான மாகவில்லை. ஆக, முதல்வர்- மந்திரி-மாஃபியா என முக்கோண மோதல் வெடித்தபடி இருக் கிறது'' என்கின்றனர்.
இதற்கிடையே, சண்முகத்திடம் மென்மையான போக்கை கடைப்பிடிக்குமாறு ரத்தினம், ராமச்சந்திரனுக்கு முதல்வர் அலுவலகம் அறிவுறுத்தியிருக் கிறது. அதனால் சண்முகத்தை அவர்கள் அணுக முயற்சித்த போது பாராமுகம் காட்டியிருக் கிறார். மேலும், சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணனின் மகன் விபத்தில் சிக்கி ராமச் சந்திரா மருத்துவமனையில் அட்மிட்டான சமயத்தில், உடனிருந்து கவனித்துக்கொண்ட சண்முகத்துக்கு ஆறுதல் சொல்லவும் அவரை தங்கள் விசயத்தில் கூல் பண்ணவும் முயற்சித்தனர். ஆனாலும் சமாதானமாகவில்லை சண்முகம். அதே நிலை இப்போதும் சண்முகத்திடம் ஆக்கிரமித் திருப்பதால் கனிம வளத்துறையில் விரைவில் ஒரு பூகம்பம் வெடிக்கும் என்கின்றனர்.