
தர்காவின் வளாகத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு பூஜை செய்ய இந்துக்களுக்கு கர்நாடகா நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.
கர்நாடகா மாநிலம், ஆலந்து பகுதியில் லட்லே மஷாக் என்ற தர்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த தர்காவின் வளாகத்தில் சிவலிங்கம் ஒன்று உள்ளது. இதனால், கடந்த 2022ஆம் ஆண்டில் தர்காவில் மத உரிமைகள் தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இதனால், அங்கு பதற்றங்கள் உண்டாகி பிரச்சனைகள் ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு கர்நாடகா நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
இந்த நிலையில், இன்று மகாசிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. அதனால், தர்காவின் வளாகத்தில் அமைந்துள்ள சிவலிங்கத்திற்கு பூஜை செய்ய இந்து மக்களுக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இது குறித்து நீதிமன்றம் கூறியதாவது, ‘இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை உர்ஸ் தொடர்பான சடங்குகளைச் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை, தர்கா வளாகத்திற்குள் அமைந்துள்ள ராகவ சைதன்ய சிவலிங்கத்திற்கு இந்து பக்தர்கள் பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். தர்காவிற்குள் பூஜை செய்ய 15 பேர் நுழைய வேண்டும்.
இரு சமூகத்தினரும் நிர்ணயிக்கப்பட்ட நேர இடைவெளிகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். சொத்தின் தற்போதைய நிலையைப் பராமரிக்க வேண்டும். சடங்குகளின் போது அந்த இடத்தில் அங்கீகரிக்கப்படாத மாற்றங்கள் எதுவும் செய்யப்படுவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.
மகாசிவராத்திரியின் போது தர்காவில் இந்து மக்கள் பூஜை செய்தால், எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் ஆலந்து பகுதி முழுவதும் 144 தடை விதித்துள்ளது. பாதுகாப்பு கணிசமாக பலப்படுத்தப்பட்டு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளன. 14ஆம் நூற்றாண்டு சூஃபி துறவி மற்றும் 15ஆம் நூற்றாண்டு இந்து துறவி ராகவ சைதன்யாவுடன் தொடர்புடைய இந்த ஆலயம் வழிபாட்டு தலமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.