
தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய் விக்கிரவாண்டியில் அக்கட்சியின் முதல் மாநாட்டை நடத்தி இருந்தார். அதனைத் தொடர்ந்து, பரந்தூரில் புதியதாக அமைய இருக்கும் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடி வரும் மக்களை அண்மையில் சந்தித்திருந்தார். அதோடு அக்கட்சி கடந்த 2ஆம் தேதி (02.02.2025) 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இந்நிலையில் த.வெ.க.வின் 2ஆம் ஆண்டு துவக்க விழா செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று (26.02.2025) காலை 10 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வானது மதியம் 01:30 மணி வரை நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விழாவில் பங்கேற்க சுமார் 2500 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி அழைப்பு விடுக்கப்பட்ட நிர்வாகிகள், அனுமதிச் சீட்டு இருந்தால் மட்டுமே விழா நடைபெறும் இடத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அக்கட்சியின் சார்பில் 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 15 பேர் என்ற அளவில் சுமார் 2500 பேர் அனுமதிக்கப்பட்டனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், “வாக்கு வங்கிக்காக சாதி, சீர்கேடுகளை எதிர்க்க அஞ்சும் நயவஞ்சகர்களுக்கு கெட் அவுட் (#GetOut)” என விழா நடைபெறும் இடத்தில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதோடு பேனரில், ‘புதிய கல்விக் கொள்கை, மும்மொழிக்கொள்கை திணிப்பிற்கு எதிராகப் போராட உறுதியேற்போம்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பேனரில் அக்கட்சியின் தலைவர் விஜய் கையெழுத்திட்டு த.வெ.க. சார்பில் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். விழா மேடையில் இருந்த அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகளான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரும் விஜயைத் தொடர்ந்து கையெழுத்திட்டனர். அதே சமயம் விழா மேடையில் இருந்த தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இதில் கையெழுத்திட மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே விழா நடைபெறும் அரங்கத்திற்குள் செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்கள் செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பவுன்சர்கள், பத்திரிக்கையாளர்களை உள்ளே விட மறுத்ததாகக் கூறப்படுகிறது. அதோடு பத்திரிகையாளர்களை நோக்கி பவுன்சர்கள் ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனால் பவுன்சர்கள் - பத்திரிகையாளர்கள் இடையே முதலில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் மீது பவுன்சர்கள் கடுமையாகத் தாக்குதல் நடத்தியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலில் காயமடைந்த தனியார் தொலைக்காட்சியின் பத்திரிகையாளர் இளங்கோவிற்கு ஆம்புலன்ஸில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். பத்திரிகையாளர்கள் மீது பவுன்சர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.