
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறது. உள்ளூர் மொழிக்கு முதலிடம் என்ற தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்கிறதா இல்லையா?. ஏற்றால் தான் நிதி” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதோடு மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயல்வதாகக் கூறி மத்திய பாஜக அரசுக்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய சூழலில் தான் சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (25.02.2025) 19வது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மார்ச் 5ஆம் தேதி அனைத்துக் கட்சிக்கூட்டம் கூட்டப்பட உள்ளது என முடிவெடுக்கப்பட்டது. 2026ஆம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில், நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளை மத்திய அரசு மறுசீரமைப்பு செய்ய வாய்ப்புள்ளது. இதனால் தமிழ்நாடு 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க வேண்டிய சூழல் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பா.ம.க. தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் சேலத்தில் இன்று (26.02.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி கொடுக்க மறுப்பது தவறு ஆகும். தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாமக பங்கேற்கும். இந்தி வேண்டாம் என்று சொல்கிறார்கள். இந்தி திணிக்கத் திணிக்க கூடாது என்று சொல்கிறீர்கள். சரி தமிழுக்கு என்ன செய்தீர்கள். தமிழை வைத்துத் தானே ஆட்சிக்கு வந்தீர்கள். மொழிப்போரை வைத்துத் தான் 1967 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தீர்கள். 67முதல் இன்றைக்கு வரைக்கும் தமிழுக்கு என்ன செய்தீர்கள்?. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருவதற்கு முன் வெறும் 20 தனியார் தனியார் பள்ளிக்கூடங்கள் தான் இருந்தன.
இன்றைக்குக் கிட்ட 55 ஆயிரம் பள்ளிகள் தனியார்ப் பள்ளிகளுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்குக் காரணம் யார்?. அரசுப் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும். அரசுப் பள்ளிகளுக்கு நிதி உதவி செய்திருக்க வேண்டும். அரசுப் பள்ளிகளைக் காப்பாற்றி இருக்க வேண்டும். கல்வியை அரசு, மக்களுக்கு இலவசமாக, தரமாகக் கொடுக்க வேண்டியது ஒன்றாகும். இது அரசினுடைய கடமை ஆகும். இதனை எல்லாம் விட்டுவிட்டு கல்வியை வியாபாரம் ஆக்கியது திராவிட கட்சிகள். அதிலும் குறிப்பாக திமுக தான் கல்வியை வியாபாரமாக மாற்றிவிட்டு இன்றைக்கு இந்தியை எதிர்ப்பது எந்த வகையில் நியாயம்?. இந்தியைத் திணிக்கக் கூடாது. ஆனால் கற்றுக்கொள்ளலாம். ஆனால் மத்திய அரசு இந்தியைத் திணிப்பது தவறு.

அதே வேளையில் தமிழுக்கு என்ன செய்தீர்கள்?. தமிழ் வழிக் கல்வி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 20 ஆண்டு காலமாக வழக்கு நிலுவையில் உள்ளது. தமிழைப் பயிற்று மொழியாக ஆக்க வேண்டும் என்று 26 ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தின் நிலுவையில் உள்ளது. அதற்கு என்ன செய்தார்கள்?. வழக்கைச் சீக்கிரம் முடிப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?. குறைந்தபட்சம் தமிழை ஒரு பாடமாக கற்றுக் கொடுக்க வேண்டும் என்று 2006 இல் தான் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது” என ஆவேசமாகப் பேசினார்.