Skip to main content

நிரந்தர முதல்வர் இ.பி.எஸ்.! நாளைய முதல்வர் ஓ.பி.எஸ்.! -கே.டி.ராஜேந்திரபாலாஜி Vs செல்லூர் ராஜு!

Published on 11/08/2020 | Edited on 11/08/2020

 

eps

 

“எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்தபோது ‘நானே முதல்வர் வேட்பாளர்’ என்று சொல்லவில்லையே? ஜெயலலிதாவையும்கூட, மக்கள்தான் முதல்வராக வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அ.தி.மு.க. வரலாறு இது. அதனால், சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி, யாரை முதல்வர் வேட்பாளர் என்று சொல்கிறார்களோ, அவரே முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார்..” என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதற்கும்,  மறுநாளே,  ‘எடப்பாடியாரே என்றும் முதல்வர்! இலக்கை நிர்ணயித்துவிட்டே, களத்தைச் சந்திப்போம்! எடப்பாடியாரை முன்னிறுத்தி தளம் அமைப்போம்! களம் காண்போம்! வெற்றிகொள்வோம்! 2021-ம் நமதே!’ என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ‘ட்வீட்’ போட்டதற்கும், வலுவான அரசியல் பின்னணி உள்ளது என, அ.தி.மு.க. உள்விவகாரங்களை விவரிக்கின்றனர், ஆளும்கட்சியினர். 

 

மூன்று தடவை தமிழகத்தின் முதலமைச்சராக, ஓ.பன்னீர்செல்வம்  பதவி வகித்த மொத்த நாட்களின் எண்ணிக்கை 469 என்றால், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவியேற்று 1,270 நாட்களுக்கு மேல் ஆகிறது. மூன்று முறை முதல்வர் என்பது மேலோட்டமாக பெரிதாகவே தெரியும். ஒரே ஒரு தடவை என்றாலும், ஓ.பன்னீர்செல்வத்தோடு ஒப்பிடும்போது, அவரைக் காட்டிலும்  மூன்று மடங்கு அதிகமான நாட்களில், முதலமைச்சராக தன்னை நிலைநிறுத்தியபடி இருக்கிறார், எடப்பாடி பழனிசாமி. 

 

ஏன் இந்த நாள் கணக்கு என்றால், தன்னிடமிருந்து முதலமைச்சர் பதவியை தட்டிப் பறித்தவர் எடப்பாடி என்பதும்,  துணை முதல்வர் ஆவதற்காக தர்மயுத்தம் நடத்த வேண்டிய நிலைக்கு தான் தள்ளப்பட்டதும்,  ஓ.பன்னீர்செல்வத்தின் மனதை விட்டு அகலாதவை. அதை ஓ.பி.எஸ். வெளிக்காட்டாவிட்டாலும், அவரது விசுவாசிகள் வெளிக்காட்டாமல் இருப்பதில்லை. குறிப்பாக தேனி மாவட்ட ஆளும்கட்சியினர் ‘என்றும் ஒரே தலைவர் ஓ.பி.எஸ்.’ என்றும், ’நமது தலைவர்! நாளைய முதல்வர்!’ என்றும், ‘மக்கள் நலனே தன் நலன் என்று மக்களுக்காக உழைக்கும் ஒரே தலைவர்’ என்றும் அவரது புகழ் பாடாத நாளில்லை.  


சசிகலா சிறை சென்றார்; எடப்பாடி முதலமைச்சரானார்; டிடிவி தினகரன் அ.ம.மு.க. என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார். அதன்பிறகு, அ.தி.மு.க.வில் முன்பிருந்த ‘ஒரே ஜாதி ஆதிக்கம்’ ஆட்டம் கண்டது. ஆனாலும், தென்மாவட்ட அ.தி.மு.க.வில், ‘எடப்பாடி நம்மாளு இல்ல..’ என்ற எண்ணம் அங்கங்கே தலை தூக்கியது. ‘என்றும் ஒரே தலைவர்!’ என ஓ.பன்னீர்செல்வத்தின் புகழ் பாடுவதெல்லாம், அதன் வெளிப்பாடுதான்! அவரும் அதனை ரசிப்பதால், ‘நாளைய முதல்வர்’ என விசுவாசிகள் அவரைக் கொண்டாடுகின்றனர்.  

 

ktr

 

தென்மாவட்டங்களில் சிலரது எண்ண ஓட்டங்கள், தனக்கு எதிராக இருப்பதை எடப்பாடி அறியாதவரல்ல. அதனாலேயே, ஜாதி கடந்து, தென்மாவட்ட மக்களின் மனதில் தன்னுடைய முகம் அழுத்தமாகப் பதிய வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுகிறார். தமிழகம் முழுவதும்  மக்கள் ஏற்றுக்கொண்ட ஒரே தலைவராகவும், முதலமைச்சராகவும், தான் மட்டுமே இருக்க வேண்டும் என்பதற்காக, தென் மாவட்டங்களுக்கும் விசிட் அடித்து, ரொம்பவே மெனக்கெடுகிறார். 

 

எடப்பாடியின் இந்த ‘கெட்டிக்காரத்தனம்’ தென்மாவட்ட ஆளும்கட்சி பிரபலங்கள் சிலருக்கு வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. தங்களுக்கோ, தாங்கள் சிபாரிசு செய்யும் விசுவாசிகளுக்கோ, வரும் தேர்தலில் சீட் தராவிட்டால், தங்களின் எதிர்காலம் என்னாவது என்று கவலைகொள்ள வைத்திருக்கிறது. ‘வடக்கே நீங்கன்னா.. தெற்கே நாங்கதான்..’ என்பதை அழுத்தமாகச் சொல்வதற்காகவே, செல்லூர் ராஜு போன்றவர்கள், ‘எடப்பாடி ஒன்றும் நிரந்தர முதல்வரல்ல!’ என்பதைச் சூசகமாக, பேட்டி மூலம் வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.   

 

ஜாதி கிடக்கட்டும்.. ’ஒரே தலைவர்’ எனச் சொல்வதற்கு, அ.தி.மு.க.வில் பொருத்தமானவர் யாரேனும் உண்டா என்பதைப் பார்ப்போம்! கூவத்தூரில் என்ன நடந்தது? பணம்தானே பிரதானம்! பெயரிலேயே செல்வத்தை வைத்திருக்கும் ஓ.பி.எஸ்., இதனை அறியாதவரா? வாரியிறைக்க மனம் இல்லையே? இந்தச் சிக்கனம்தான் அவரை பலவீனப்படுத்தி உள்ளது. ஜெயலலிதாவோ, சசிகலாவோ, யாரோ ஒருவர் பின்னணியில் இருந்து இயக்கினால் மட்டுமே செயல்படக்கூடிய முதலமைச்சராக ஓ.பி.எஸ். இருந்திருக்கிறார். எடப்பாடி அப்படிக் கிடையாது. அவரது பாணியே தனி. சசிகலா காலில் விழவும் செய்தார். நேரம் பார்த்துத் தூக்கி எறியவும் செய்தார். டிடிவி தினகரனை கட்சியிலிருந்து நீக்கியதெல்லாம் எடப்பாடியின் துணிச்சலே!

 

http://onelink.to/nknapp

 

கட்சி விதிகளின் பெயரால், எடப்பாடிக்கு  ‘செக்’ வைக்கும் விதமாக, தென்மாவட்ட அமைச்சரான செல்லூர் ராஜுவால் பேச முடியுமென்றால், எடப்பாடியின் விசுவாசியான, அதிரடிக்கு பெயர்போன கே.டி.ராஜேந்திரபாலாஜி சும்மாவா இருப்பார்? ஏற்கனவே, விருதுநகர் மாவட்ட ஜாதி அரசியலால் வெறுத்துப்போய் இருக்கும் அவர், சரியாக இதனைப் பயன்படுத்திக் கொண்டார். ‘எடப்பாடியே என்றும் முதல்வர்!’  என்று ‘ட்வீட்’ தட்டிவிட்டார், பதிலடியாக! 

 

சீனியர் அமைச்சர்கள் அமைதி காக்க.. ‘மோடி டாடி’ கே.டி.ராஜேந்திரபாலாஜியும், ‘தெர்மாகோல் கண்டுபிடிப்பு’ செல்லூர் ராஜுவும், காமெடி டிராக்கில் இருந்து விலகி, சீரியஸ் அரசியல் பண்ணுவது, விந்தையாகத்தான் இருக்கிறது.   

 

உலகத்தில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை அறிந்தும் அறியாததுபோல் நடப்பதுதானே அரசியல்! 

 

 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.