புதுக்கோட்டை மாவட்டத்தில் நகரமைப்பு மட்டுமின்றி நீர்ப்பாசனமுறைக்கும் முன்னோடியான மாவட்டமாக உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கவிநாடு கண்மாயில் ஒரு மடையை திறந்தால், ஒரே நேரத்தில் 6 வாய்க்கால்களில் சீராக தண்ணீர் பாயும் உன்னதமான நீர்பாசன முறை கடைப்பிடிக்கப்பட்டிருந்தது. அந்த மடை பாசன முறை இன்றளவும் உள்ளது நீர்ப்பாசனமுறைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது பெருமையாக உள்ளது.
இதேபோல, பின்னாள் வந்த தொண்டைமான் மன்னர்களும் நகரமைப்பை மட்டுமின்றி நீர்ப்பாசன முறைக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதற்கு பல கல்வெட்டு சான்றுகள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில், தற்போது ராஜகோபால தொண்டைமான் மன்னரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நாட்டின் எல்லை வரையறை கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது நீர்ப்பாசன கல்வெட்டும், அந்த கல்வெட்டில் ஒரு விவசாயி தன் தோளில் ஏர் கலப்பையை தூக்கிச் செல்லும் சித்திரமும் பொறிக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கும் விவசாயிக்கும் எத்தனை உதவியாக இருந்தார்கள் என்பதற்கு சான்றாக உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் ஆத்தங்கரை விடுதி ஊராட்சிக்குட்பட்ட கீழவாண்டான் விடுதி வயல்வெளியில் விஜயரகுநாத ராயத் தொண்டைமன்னரால் வெட்டப்பட்ட விசய ரகுநாத சமுத்திரம் எனும் பாசனத்திற்கான நீர்நிலை ஏற்படுத்தியதையும், அதற்கான நீர் வெளிப்போக்கு அமைப்பான கலிங்கி அமைப்பது குறித்தும் தகவல் அடங்கிய கல்வெட்டு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் கரு ராஜேந்திரன், நிறுவனர் மணிகண்டன், ஆகியோர் தலைமையில் ஆய்வுக் குழு உறுப்பினர்கள் கஸ்தூரி ரங்கன், முன்னாள் ஓய்வுபெற்ற ஆணையர் மணிசேகரன், ஆத்தங்கரை விடுதி தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர் பழனிச்சாமி ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கல்வெட்டின் சிறப்பம்சம் குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் கரு.ராஜேந்திரன், நிறுவனர் ஆ.மணிகண்டன் ஆகியோர் கூறியதாவது, "புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும், இயற்கை வளங்களை போற்றி வளர்ப்பதிலும், பொதுமக்களுக்கு உரிய மதிப்புகளை வழங்குவதிலும், சிறந்து விளங்கினர் என்பதை பல்வேறு சான்றுகள் மூலம் நாம் அறியலாம். குறிப்பாக தொண்டைமான் மன்னர்களின் சிறப்பாக அவர்கள் அமைத்த நீர்நிலைகளையும் இன்னும் பிற கட்டமைப்புகளையும் கூறலாம்.
என்றாலும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் தொண்டைமான் மன்னர்கள் பெயரில் குளம் அமைக்கப்பட்டது குறித்தோ, தகவல்களை அரிதாகவே பார்க்க முடிகிறது. ஆனால் ஆத்தங்கரை விடுதி சமுத்திர கலிங்கி கல்வெட்டில் மன்னர் பெயரிலேயே அமைந்திருப்பதுடன் விவசாயி ஏர் கலப்பையுடன் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது போல விவசாயி, ஏர்கலப்பை கல்வெட்டு அமைப்புகள் பார்ப்பது அரிது. அதனால் தொண்டைமான மன்னர்கள் விவசாயத்தையும் விவசாயிகளையும் போற்றி பாதுகாத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
தற்போது ராஜா ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழா நடக்கும் நேரத்தில் இந்த கல்வெட்டை எங்கள் குழு கண்டுபிடித்திருப்பது பெருமையாக உள்ளது" என்றனர்.