ஆடி மாதம் எப்போது பிறக்கும் என்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, சிறுமிகள் முதல் பெண்கள் வரை அனைவரும் ஆவலோடு எதிர்நோக்கி காத்திருப்பார்கள். இதற்கு முக்கிய காரணம் அம்மன் கோவில்களில் நடைபெறும் திருவிழாக்கள். ஆடி மாதம் முழுக்க கிராமம், நகரம் என்ற வேறுபாடு இல்லாமல் அம்மன் கோவில்களில் விழாக்கள் களை கட்டி நிற்கும்.
வட மாவட்டங்களில் உள்ள பல துரோபதை அம்மன் மாரியம்மன் அங்காளம்மன் கோவில்களில் ஆடி மாதம் காப்புக்கட்டி 18 நாட்கள் மகாபாரதம் கதைகளை காலட்சேபமாக நடத்துவார்கள். தெருக்கூத்து மூலம் மகாபாரத போர் நடத்தி முடித்து, அம்மனுக்கு தீமிதி திருவிழா நடத்துவார்கள். மாரியம்மன் கோவில்களில் மாரியம்மன் பிறப்பு, காத்தவராயன் கதை போன்றவைகளை பம்பை, உடுக்கை உடன் காலட்சேபம் நடத்துவார்கள். பல ஊர்களில் அம்மன் திருவிழாக்களில் திரைப்பட இசை அமைப்பாளர்களை கொண்டு மேடைக் கச்சேரிகள் நடத்தப்படும். இப்படி ஆடி மாதம் முழுவதும் தூங்கா இரவுகளாக மக்கள் விழித்திருந்து அம்மனுக்கு விழா நடத்துவார்கள்.
காணும் இடங்களிலெல்லாம் பெண்கள் மஞ்சள் ஆடைகளுடன் வலம் வருவார்கள். அம்மனுக்கு காவடி எடுப்பது அலகு போடுவது பால் குட ஊர்வலம், இரவு நேரங்களில் தெருக்கூத்து, கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என கிராமங்களில் தூள் பறக்கும். இந்த திருவிழா காலங்களில் இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில் காதல் பிறக்கும், வலுப்படும். இதற்காகவே தங்களை அழகுபடுத்திக் கொண்டு ஹீரோவாகவும், ஹீரோயின்களாகவும் வலம் வருவார்கள். உற்றார், உறவினர்களை எல்லாம் வரவழைத்து ஊர்கூடி அம்மனுக்கு பொங்கல் வைத்து உறவினர்கள் புடைசூழ சென்று அம்மனை வழிபடுவார்கள்.
ஆனால் இந்த ஆண்டு அம்மன் கோவில்கள் களை இழந்து நிற்கின்றன. அம்மனை வழிபடும் மக்கள் திருவிழா நடத்த முடியாத நிலைகண்டு வருத்தம் கலந்த சோகத்துடன் உள்ளனர். இந்தாண்டு இந்த கரோனாவால் திருவிழா நின்று போச்சே என்று அங்கலாய்த்து பேசி வருகிறார்கள். தமிழக அரசின் அறநிலையத் துறை கோவில் திருவிழாக்களை தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் பழக்கவழக்கங்கள் எதுவும் மாறுதல் இல்லாமல் கோவில் வளாகத்திற்குள் மட்டும் மக்கள் கூட்டம் இல்லாமல் நடத்த வேண்டும். இப்படி அறநிலையத்துறைக்கு சொந்தமான அம்மன் கோவில்களில் ஆடிமாத வழிபாடு செய்வதற்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.
அதன்படி கோவில்களில் பாரம்பரிய வழக்கப்படி நடைபெறும் திருவிழாக்களை அதிகாரிகளின் அனுமதியோடு குறைந்த நபர்களைக் கொண்டு கோவில் வளாகத்திற்குள் மட்டும் நடத்த வேண்டும். மேலும் கோவில்களில் குறைந்த அளவில் பணியாளர்களை வைத்துக்கொண்டு அவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். கோவில் வளாகத்திற்குள் மக்கள் ஆறு அடி சமூக இடைவெளியை கடைப்பிடித்து திருவிழாக்கள் நடத்த வேண்டும். இந்த விழாக்களில் உபயதாரர்கள், பக்தர்கள் கலந்துகொள்ள கண்டிப்பாக அனுமதி இல்லை. கரோனா நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள அரசால் வழங்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டி நெறிமுறைகள் அனைத்தையும் முறையாக கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் பெரிய அளவில் திருவிழாக்கள் நடத்தக்கூடாது, கோவிலுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளை வீடுகளிலிருந்து காணும் வகையில் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்து கொள்ளலாம் இப்படிப்பட்ட உத்தரவுகளை அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி ஐ.ஏ.எஸ். பிறப்பித்துள்ளார்.
இப்படிப்பட்ட விதிமுறைகளுடன் கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களில் எங்காவது திருவிழா நடத்த முடியுமா அறநிலைத்துறை அறிவிப்பு கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம மக்கள், கிராம கோயில் பூசாரிகள், கிராம தர்மகர்த்தாக்கள் ஆகியோர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது அதற்கு உதாரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் அந்தந்த பகுதியில் உள்ள கிராம பூசாரிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊர் முக்கியஸ்தர்களை அழைத்து திருவிழாக்கள் நடத்துவது சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த கூட்டங்களில் அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்கள் ஊர் முக்கியஸ்தர்களிடம் ஆடி மாதம் அம்மன் கோயில்களில் நடைபெறும் தீமிதி திருவிழாக்கள், தெருக்கூத்து ஆகியவற்றை நடத்துவதை தவிர்க்க வேண்டும். ஊரடங்கு அமலில் உள்ளதால் கிராமங்களில் நடக்கும் திருவிழாக்களில் புது மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும், பெரிய அளவில் திருவிழாக்கள் நடத்த வேண்டுமானால் அது குறித்து திட்டங்கள் பற்றி முன்கூட்டியே தகவல் தெரிவித்து அனுமதி பெற்ற பிறகே நடத்தவேண்டும், அதிலும் அறநிலையத்துறையின் விதிமுறைகளை மீற கூடாது என்று அறிவுறுத்தி வருகிறார்கள்.
அறநிலையத்துறை காவல்துறை ஆகியவற்றின் விதிமுறைகள் வழிகாட்டுதல்படி, எந்த கோவில்களிலும் திருவிழா நடத்துவதற்கு சாத்தியமில்லை காரணம் கிராமங்களில் திருவிழாக்கள் நடத்த துவங்கினால் கிராம மக்கள் ஒன்று கூடுவதை தடுக்க முடியாது. 6 அடி சமூக இடைவெளியை கிராம கோயில்களில் கடைபிடிப்பது சாத்தியமற்றது என்று கூறி புலம்புகிறார்கள் ஊராட்சிமன்ற தலைவர்கள், ஊர் முக்கியஸ்தர்கள்.
பல ஊர்களில் கோயில் கருவறையில் உள்ள அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை மட்டுமே பூசாரிகளை வைத்து முடியும். அதையும் கூட பயந்து, பயந்து செய்யவேண்டிய நிலை உள்ளது என்று ஒருவருக்கொருவர் களையிழந்த முகத்துடன் வார்த்தைகளை பரிமாறிக் கொள்கிறார்கள். சந்தோஷத்துடன் திருவிழா நடத்த முடியாத வருத்தம் கிராமப்புற மக்களிடம் உள்ளது.