Skip to main content

காலம் கடந்தும் காமராஜரின் பெயர் சொல்லும் திட்டத்தின் முன்னோடி...  

Published on 09/07/2019 | Edited on 09/07/2020

சென்னையில் வசிக்கும் இன்றைய தலைமுறைக்கு பரிட்சயமானது பனகல் பூங்கா. ஆனால் நம்மில் பலருக்கு அந்த பெயர் எதனால் வந்தது, அங்கு சிலையாக இருக்கும் நபர் யார், அவருக்கு எதற்காக சிலை வைத்துள்ளார்கள் என்றும் தெரியாது. பனகல் மாளிகையும், பனகல் பூங்காவும் பனகல் அரசர் நினைவாக வைக்கப்பட்டது.
 

panagal arasar


திராவிட இயக்கங்களுக்கும், திராவிட கட்சிகளுக்கும் முன்னோடியாக இருந்தது நீதிக்கட்சி. நீதிகட்சி அப்போதைய சென்னை மாகாணத்தை 1920 முதல் 1926 வரை ஆட்சி செய்தது. இதில் 1921ம் ஆண்டு முதல் 1926ம் ஆண்டுவரை பனகல் அரசர் என்று அழைக்கப்படும் பனங்கன்டி ராமராயநிங்கார் ஆட்சிசெய்தார். இவருக்கு முன்பிருந்த சுப்புராயர் உடல்நலக்குறைவால் பதவி விலகியதால், அடுத்ததாக இவர் ஆட்சிக்கு வந்தார். 1923ம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சிக்கு வந்த இவர் 1926 வரை ஆட்சிசெய்தார். 



இவரது ஆட்சிக்காலம் சமத்துவத்திற்கான ஆட்சிகாலம், சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கான ஆட்சிக்காலம் என்றே சொல்லலாம். கல்வியில் இவர் ஆற்றிய பங்கு முக்கியமானது. இந்து அறநிலையத்துறை சட்டத்தை பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டுவந்தவர் இவர்தான். இந்த சட்டம் கோவில் நிர்வாகம், அர்ச்சனை உட்பட அனைத்தும் எங்களுக்கு சொந்தம் எனக்கூறிய ஒரு பிரிவினரிடமிருந்து மீட்டு, அனைவரும் வழிபடுவது உட்பட பல உரிமைகளை பெற்றுக்கொடுத்தது. அதன்மீட்சிதான் இந்து அறநிலையத்துறையும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் வரை அனைத்தும். 

அடுத்து இவர் கொண்டுவந்தது இடஒதுக்கீடு சட்டத்தின் முதல்கட்டமான வகுப்புவாரி உரிமை சட்டம். இதன்மூலம் அரசுப் பணிகளில் அனைத்து சாதியினரும் பங்கேற்க வாய்ப்பு உருவானது. அனைவருக்கும் கல்வி கிடைத்தது. மேலும் அப்போது இருந்த, சமஸ்கிருதம் தெரிந்திருந்தால் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்ற சட்டத்தை நீக்கினார். காமராஜரை இன்றுவரை நாம் நினைவுகூறுவது அவரின் ஆட்சிகாலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முக்கியமான மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்ததற்காக. மதிய உணவு திட்டத்தை முதன்முதலில் கொண்டுவந்தவரும் இவரே. அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவாக இவரும் உறுதுணையாக இருந்தார். 



தொழிற்சாலை திட்டத்தை கொண்டுவந்து சென்னை மாகாணத்தில் தொழிற்சாலை பெருகவும், அதே நேரத்தில் தொழிலாளர் பாதுகாப்பாய் இருக்கவும் ஆவணம் செய்தார். இதுதவிர மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரை ஆதிதிராவிடர் என அழைக்க சட்டம் இயற்றினார். 1921லேயே பெண்களுக்கு வாக்குரிமைக்கு வழிவகை செய்தார். டி. நகர் பகுதிகள் உருவாக்கப்பட்டதற்கு முக்கியகாரணமாக இருந்தது ஆகியவை முக்கியமானது. இவைகளனைத்தையும் 1921 முதல் 1926 வரையிலான காலகட்டத்தில் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று அவரின் 92வது பிறந்த தினம்...