#90sKidsRumour என்ற ட்விட்டர் ஹேஷ்டேக் நேற்று மதியம் சென்னை அளவில் ட்ரெண்டாக தொடங்கியது. அதன் பிறகு பல 90 ஸ் கிட்ஸ்களும் தாங்கள் நம்பி ஏமாந்த புரளிகளை இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ஷேர் செய்ய ஆரம்பித்தனர். அதன் பிறகு அந்த ஹேஷ்டேக் இந்தியளவில் முதலிடத்திற்கு ட்ரெண்டாகியது. தமிழகத்தில் ஆரம்பித்த இந்த ஹேஷ்டேக் வட இந்தியா வரை பரவியது. வட இந்திய 90ஸ் கிட்ஸ்களும் தாங்கள் நம்பி ஏமாந்த புரளிகளை இதில் பதிவிட ஆரம்பித்தனர். அவையும் பெரும்பாலும் நாம் கேள்விப்பட்ட புரளிகளாகவேதான் இருந்தன. நம்மிடம் கூறப்பட்ட பல புரளிகள் அவர்களிடமும் கூறப்பட்டுள்ளன என்பது 90ஸ் கிட்ஸ்களின் பெரும் ஆறுதலாக அமைந்தது. அப்படி 1990களில் சிறுவர்களாக இருந்தவர்கள் நம்பிய பொய்களை இந்த ஹேஸ்டேகுடன் இணைத்து பதிவிட்டனர். இந்த 90ஸ் கிட்ஸ் என்றாலே சிறப்பு வாய்ந்தவர்கள் என்ற வண்ணம்தான் சமூக வலைதளங்களில் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். யார் இந்த 90ஸ் கிட்ஸ் என்று பெரும் பிரச்சனைகள் கூட சில நண்பர்கள் வட்டாரத்தில் வருகிறது என்றால் பாருங்களேன்.
நேற்று இந்த ஹேஸ்டேகில் சொல்லப்பட்ட ஒரு சில புரளிகள் என்ன என்று பார்ப்போம். இதில் பல புரளிகள் 90ஸ் கிட்ஸை அவர்களது கடந்த காலத்திற்கே அழைத்து சென்று அவர்களை மேலும் குஷிப்படுத்திருக்கும். இதை பார்த்த 20ஸ் கிட்ஸிற்கு என்னடா இது இவ்வளவு மக்கு பசங்களாவா இந்த 90ஸ் கிட்ஸ் இருந்திருக்கிறார்கள் என்று தங்களுக்குள்ளேயே கேட்டிருப்பார்கள். இப்போதெல்லாம் பிறக்கிற குழந்தையே எதை சொன்னாலும் நம்பாமல், கேள்விமேல் கேள்விகள் கேட்கிறது. ஆனால், அப்போதெல்லாம் அப்படியா நம்மை விட பெரியவர்கள் யார் சொன்னாலும் அதை நம்பிவிட வேண்டியதுதான். சரி நேற்று ட்ரெண்டான 90ஸ் கிட்ஸின் புரளிகள் என்ன என்று பார்ப்போம்...
‘பழங்களை சாப்பிடும்போது அதன் விதையை சாப்பிட்டால் வயிற்றில் மரம் வளரும்’
‘பெண்ணுக்கு முத்தம் கொடுத்தாலே குழந்தை பிறந்துவிடும்’
‘மயில் இறகை புத்தகத்திற்குள் வைத்தால் அது குட்டிப்போடும்’
‘பூமரை முழுங்கிவிட்டால், இறந்துவிடோம்’
‘நமக்கு ஏதேனும் பிரச்சனை வந்தால், சக்திமான் (சில நேரம் பவர் ரேஞ்சர்ஸ்) நம்மை காப்பாற்றுவார்’
‘கிரிக்கெட்டர் நவ்ஜோதித் சிங் சித்துவிற்கு தவறாக நடுவர் அவுட் தந்ததால், ஸ்டம்பால் குத்தி நடுவரை கொன்றுவிட்டார்’
‘நடிகர் சரத்குமாரும் ஹாலிவுட் நடிகர் அர்னால்டும் நெருங்கிய நண்பர்கள்’
‘ஆம்னி வேன் என்றால் பிள்ளையை பிடித்துவிட்டு செல்பவர்கள்’
‘அண்டர்டேக்கருக்கு 7 உயிர்’
‘அண்டர்டேக்கரும் கேனும் அண்ணன் தம்பி’
‘பென்சிலை சீவி தண்ணீரில் போட்டால் ரப்பர் வரும்’
‘பன்னி கறியில் உருவாக்கப்படுவதுதான் பூமர்’
‘ரிக்கி பாண்டிங், ஸ்பிரிங் பேட் வைத்துதான் பேட்டிங் சிறப்பாக ஆடினார். அதனால்தான் அவர் 2003 உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடி கோப்பையை தட்டிச் சென்றனர்’
‘2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டி ரீ-மேட்ச் நடக்கும்’
‘தலையில் இரண்டு சுழி இருப்பவருக்கு, இரண்டு திருமணம் நடக்கும்’
மேலும் இதுபோல பல புரளிகள் அப்போது வலம் வந்துகொண்டிருந்தன. அதை தற்போது நினைவில் வைத்திருந்தால் நீங்களும் பகிர்ந்து உங்களுடைய சிறுவயதிற்கு பயணத்திவிட்டு வாருங்கள்...