தமிழகத்தில் கைதிகளே தயாரித்த 3 லட்சத்திற்கும் மேற்பட்ட முகக்கவசங்கள் வாங்க ஆளின்றி தேங்கிக் கிடப்பதால், சிறைத்துறை நிர்வாகம் அதிருப்தி அடைந்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்று அபாயம் உள்ளதால் கடந்த மார்ச் 24-ம் தேதி மாலை முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சேலத்தில் இன்னும் ஒரு படி மேலே சென்று, முகக்கவசம் அணியாமல் வெளியே நடமாடினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி எச்சரித்துள்ளது.
இதனால் ஒருபுறம் முகக்கவசத்திற்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், தமிழகச் சிறைகளில் உள்ள கைதிகள் மூலம் முகக்கவசங்கள் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, கடலூர், வேலூர் உள்ளிட்ட மத்தியச் சிறைகளில் உள்ள கைதிகள் முகக்கவசம் தயாரிக்கும் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். அவர்கள் தயாரித்த முகக்கவசங்களைக் காவல்துறையினர் நேரடியாகக் கொள்முதல் செய்து வந்தனர்.
தற்போது சாதாரணப் பனியன் துணியால் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்கள் 5 ரூபாய் முதல் மருந்துக் கடைகளிலேயே கிடைக்கின்றன. பொது வெளியிலும் சிலர் கூவிக்கூவி விற்பனை செய்கின்றனர். இதனால் ஆரம்பத்தில் நிலவிய தட்டுப்பாடு, தற்போது நீங்கியுள்ளது.
சந்தையில் தேவை குறைந்ததால், மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் நீல நிறத்தினாலான கைதிகள் தயாரித்த 3 லட்சத்திற்கும் மேற்பட்ட முகக்கவசங்கள் சிறைச்சாலைகளிலேயே தேங்கிக் கிடக்கின்றன. காவல்துறையினரும் ஏனோ சிறை நிர்வாகத்திடம் இருந்து முகக்கவசங்களை கொள்முதல் செய்வதைத் திடீரென்று நிறுத்திக் கொண்டனர்.
இதுகுறித்து சிறைத்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ''கரோனா வைரஸ் தொற்று அபாயத்தால் முதன்முதலில் ஊரடங்கு அமலுக்கு வந்தபோது முகக்கவசங்களுக்கு அதிக தேவை இருந்தது. அதனால் தண்டனை கைதிகள் மூலம் முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டன.
மேலும், காவல்துறையினருக்கு பல தன்னார்வ அமைப்புகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் தேவையான முகக்கவசங்களை ஸ்பான்சர் செய்து விடுவதால், காவல்துறையினர் சிறை நிர்வாகத்திடம் முகக்கவசம் வாங்குவதை முன்னறிவிப்பின்றி நிறுத்தி விட்டனர். இதனால்தான் சிறை கைதிகள் தயாரித்த 3 லட்சம் முகக்கவசங்கள் தேங்கியுள்ளன,'' என்றனர்.