Skip to main content

"பாரதிராஜா இல்லையென்றால் இப்படம் இல்லை" - இயக்குநர் தங்கர் பச்சான்

Published on 28/12/2022 | Edited on 28/12/2022

 

"Without Bharathiraja, this film wouldn't exist" - Director Thangar Bachchan

 

இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கத்தில் இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் கௌதம்மேனன் போன்றோர் நடிக்கும் படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தங்கர்பச்சான் பேசியதாவது.,

 

“கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் படப்பிடிப்பு 4 நாட்களில் முடிவடைந்துவிடும். எப்போதோ முடிந்திருக்க வேண்டியது, சிறு தடங்களால் தாமதமாகிவிட்டது. ஆனால், அதுவும் நல்லதுக்குத்தான். பாரதிராஜாவின் உடல்நிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அவர் முன்பே வருகிறேன் என்று கூறினார். ஆனால், நன்றாக ஓய்வு எடுத்த பிறகு படப்பிடிப்பு வைத்துக் கொள்ளலாம் என்று நான் கூறிவிட்டேன். 

 

இதுவரை 10 படங்களை இயக்கியிருக்கிறேன். ஒளிப்பதிவு பணிகள் என்று இந்தப் படத்தையும் சேர்த்து மொத்தம் 53 படங்களில் பணியாற்றியிருக்கிறேன். 10 படங்களின் கதைகளை எடுத்துக் கொண்டு போவேன். ஆனால், அது பல மாற்றங்கள் அடைந்து வேறு ஒரு படமாக மாறிவிடும். நினைப்பதை எடுக்கும் சூழல் இன்னும் இங்கு வரவில்லை. இந்தப் படத்தில் அப்படி நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தேன். அதற்கு காரணம், சிறிதும் செயற்கைத்தனம் இல்லாத, புனைவு இல்லாத, நம்பகத்தன்மை இல்லாத ஒரு காட்சி, ஒரு உரையாடல் கூட இருக்கக்கூடாது. ஒரு இயல்பான வாழ்க்கையைப் பார்த்த அனுபவம், படம் பார்ப்பவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஏனென்றால், திரைப்படக் கலையைக் கண்டுபிடித்து 110 ஆண்டுகள் கடந்துவிட்டது. 2006 ஆம் ஆண்டு இந்த கதை எழுதப்பட்டது. ஒவ்வொரு முறை முயற்சி செய்தும் படமாக்க வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. அதற்கான தயாரிப்பாளரும், நடிகர்களும் அமையவில்லை.

 

எனக்குத் தெரிந்த வரை தமிழ்நாட்டில் சிறுதானியத்தை மட்டும் கொண்ட உணவகம் திருச்சியில் தவிர வேறு எங்கும் இல்லை. நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என்று நம் தொன்மம் மாறாமல் இப்படத்தின் தயாரிப்பாளர்  வீரசக்தி கொடுத்து வருகிறார் என்று கேள்விப்பட்டு சாப்பிடப் போகும்போது அவருடைய நட்பு எனக்குக் கிடைத்தது. இந்தக் கதையைக் கேட்டவுடன் நாம் படமாக்குவோம் என்று கூறினார். நான் அதை நம்பாமல், பின் வாங்கமாட்டீர்களே? என்று கேட்டேன். சினிமாவைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், இந்தக் கதையில் அனைத்தும் இருக்கிறது; நெகிழ்ச்சியாக இருக்கிறது. இதுபோன்ற படங்களுக்காகத்தான் மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அது எடுக்காததால்தான் மற்ற படங்களைப் பார்க்கிறார்கள். அதன்பிறகு யாரைத் தேர்வு செய்வது என்று யோசிக்கும்போது ராமநாதன் என்ற பாத்திரத்திற்கு பாரதிராஜா அண்ணன்தான் பண்ண வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். இவரைத் தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது. அவர் இல்லையென்றால் இந்தப் படமே எடுக்கப் போவதில்லை என்று முடிவெடுத்தேன். அவரிடம் கதையைக் கூறினேன். அவரும் ஒப்புக் கொண்டார். 

 

வீரமணி கதாபாத்திரத்திற்கு ஒரு நடிகரிடம் கேட்டேன். தேதிகள் ஒத்து வராததால் அவரை நடிக்க வைக்க முடியவில்லை. யோகிபாபுவை நகைச்சுவை நடிகர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை உடைக்கும் வகையிலான கதாபாத்திரம். அவர் எப்படி நடிக்கப் போகிறார்? என்று நினைத்தேன். எள்ளளவும் நகைச்சுவை இல்லாத பாத்திரம், ஏற்கனவே 15 படங்கள் உங்களுக்கு இருக்கிறது. இப்படத்திற்கு நிறைய நாட்கள் தேவைப்படும் என்றேன். கதையைக் கேட்டுவிட்டு உருகிவிட்டார். கண்டிப்பாக நான் நடிக்கிறேன் என்றார். அதன்பிறகுதான் படமாகத் தொடங்கியது. 

 

கோமகன் என்ற பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடிக்கிறார். இதுவரை நீங்கள் பார்க்காத கௌதம் மேனனை இப்படத்தில் பார்ப்பீர்கள். பொதுவாக ஒரு படத்தில் 5 காட்சிகள் உருக வைக்கும் படியாக இருந்தாலே அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்ற படம். அப்படி இந்த படத்தில் 20 காட்சிகள் இருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் மக்கள் ஒன்றி விடுவார்கள். அடுத்தது பெண் கதாபாத்திரத்திற்கு அதிதி பாலனை தேர்ந்தெடுத்தோம். ‘அழகி’ நந்திதா தாஸிடம் ஏற்பட்ட அனுபவம்தான் அவரிடம் ஏற்பட்டது. ஏனென்றால், இந்த கதாபாத்திரத்தை சாதாரணமாக யாரும் நடித்திட முடியாது. இலக்கியச் சிந்தனையும் அனுபவ முதிர்ச்சியும் இருந்தால்தான் இந்தப் பாத்திரத்தில் நடிக்க முடியும். அதிதி அதற்கு பொருத்தமாக இருந்தார்.  

 

அடுத்து மகானா என்ற பெண்ணின் கதாபாத்திரம் அனைவரையும் அசைக்கும். குழந்தை நட்சத்திரமாக சாரல் என்ற சிறுமி நடித்திருக்கிறார்.

 

முதல் முறையாக ஜிவி பிரகாஷ் உடன் இந்தப் படத்தில் பணியாற்றுகிறேன். அவருடைய இசை 80 வயது அனுபவம் வாய்ந்ததுபோல் இருக்கும். அவரிடம் பன்னிசை, மெல்லிசை, ஹிந்துஸ்தானி, கர்நாடகா என்று அனைத்து இசைகளும் இருக்கின்றதை நினைத்து ஆச்சரியமாக இருக்கும். இந்தப் படத்திற்கு சினிமாவிற்கென்று அமைத்து வைத்திருக்கும் மெட்டுக்களில் அடங்காத பாடல்கள் வேண்டும். அதேபோல் பாடல் வரிகளும் இருக்க வேண்டும். ஒன்பது ரூபாய் நோட்டு நாவலைப் படித்ததும், கவிஞர் வைரமுத்து இந்தப் படத்தில் இருப்பதே பெருமை தங்கர் என்று கூறினார். ஒரு பாடலுக்கான சம்பளம் கூட நான் கொடுக்கவில்லை. அதேபோல், இந்தப் படத்திற்கும் எழுதிக் கொடுத்திருக்கிறார். அழகி படம்தான் என்னுடைய கடைசிப் படம் என்று லெனின் அறிவித்தார். இந்தப் படத்தின் திரைக்கதையைப் படிக்கக் கொடுத்து, வரவேண்டும் என்றதும் வந்துவிட்டார். கலை மற்றும் ஒளிப்பதிவிற்கு சிறந்த கலைஞர்கள் கிடைத்திருக்கிறார்கள்.

 

எப்போதும் ஒரு தரமான படைப்பு தனக்குத் தேவையானதை தானே தேடிக் கொள்ளும். அதுபோலத்தான் கருமேகங்கள் கலைகின்றன திரைப்படமும் இருக்கிறது. இப்படம் ஏதோ ஒன்றை செய்யப்போகிறது என்பது மட்டும் உறுதி. படத்தை மார்ச் மாதம் வெளியிட உள்ளோம். தரமான திரைப்படங்களை மக்கள் திரையில் கண்டிருந்தால் நான் இன்னும் 50 படங்கள் எடுத்திருப்பேன். மசாலா படங்களை மட்டுமே திரையில் காண விரும்புகிறார்கள். ஆகையால், மக்களின் மனநிலை மாற வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.

 

காலம் காலமாக மக்கள் மனதில் படிந்து போன பண்பாட்டின் அடையாளம் ராமேஸ்வரம். இப்படத்திற்கான தளம் அங்கு இருப்பதால் எடுத்தோம். புதிய படங்கள் அனைத்தும் வட தமிழ்நாட்டில் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கும். இப்படம் வாழ்க்கையை மையப்படுத்தி இருக்கும். வாழ்க்கையின் வளர்ச்சி, வீழ்ச்சி, தேடல், அன்பு பரிமாறுதல், விட்டுக் கொடுத்தல் என்று அனைத்தும் இருக்கும். ஒருவர் மீது அளவு கடந்த அன்பு வைத்துவிட்டால் அதனால் வரும் துன்பங்கள் என்ன என்பதைக் கூறும் படம். அதற்காக நாம் யார் மீதும் அன்பு வைக்காமல் இருக்க முடியாது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்