/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/soundaryan_0.jpg)
இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் கடந்த 1993ஆம் ஆண்டில் வெளியான ‘பொன்னுமணி’ படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் செளந்தர்யா. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சிரஞ்சீவி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
அதன் பின்னர், செளந்தர்யா திருமணம் செய்து கொண்டார். கர்ப்பிணியாக இருந்ததாகக் கூறப்பட்ட அவரும், அவரது சகோதரரும் பா.ஜ.கவுக்காக பிரச்சாரம் செய்ய கடந்த 2004 ஏப்ரல் 17ஆம் தேதி பெங்களூரில் இருந்து தெலுங்கானாவுக்கு விமானம் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட விமான விபத்தில், செளந்தர்யாவும் அவருடைய சகோதரரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம், தென்னிந்திய சினிமா உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல.. கொலை என்று 22 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகர் மீது பரபரப்பு புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம், கம்மம் மாவட்டம் சத்யநாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சிட்டிமல்லு என்பவர், பிரபல நடிகர் மோகன்பாபு மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், ‘மறைந்த நடிகை செளந்தர்யா மரணத்திற்கு மோகன் பாபு தான் காரணம். செளந்தர்யாவின் ஜல்லேபள்ளியில் உள்ள 6 ஏக்கர் விருந்தினர் மாளிகையை நடிகர் மோகன் பாபு வாங்க முயற்சித்தார். ஆனால், அதற்கு செளந்தர்யாவின் சகோதரர் அமர்நாத் மறுப்பு தெரிவித்துள்ளார். செளந்தர்யாவின் மரணத்திற்குப் பிறகு, அந்த விருந்தினர் மாளிகையை மோகன் பாபு சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளார். எனவே, அந்த இடத்தை அரசாங்கம் கையகப்படுத்தி நீதி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், மோகன் பாபு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த மோகன் பாபு மீது கொலை புகார் தொடுத்திருப்பது சினிமா உலகையே அதிர வைத்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)