
இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் கடந்த 1993ஆம் ஆண்டில் வெளியான ‘பொன்னுமணி’ படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானவர் செளந்தர்யா. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சிரஞ்சீவி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
அதன் பின்னர், செளந்தர்யா திருமணம் செய்து கொண்டார். கர்ப்பிணியாக இருந்ததாகக் கூறப்பட்ட அவரும், அவரது சகோதரரும் பா.ஜ.கவுக்காக பிரச்சாரம் செய்ய கடந்த 2004 ஏப்ரல் 17ஆம் தேதி பெங்களூரில் இருந்து தெலுங்கானாவுக்கு விமானம் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட விமான விபத்தில், செளந்தர்யாவும் அவருடைய சகோதரரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம், தென்னிந்திய சினிமா உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த சூழ்நிலையில், 21 ஆண்டுகளுக்குப் பிறகு செளந்தர்யாவின் மரணம் விபத்து அல்ல, கொலை என்று பிரபல நடிகர் மோகன் பாபு மீது ஆந்திராவைச் சேர்ந்த சிட்டிமல்லு என்பவர் போலீசில் புகார் அளித்ததாக தகவல் வெளியானது. செளந்தர்யாவுக்கு சொந்தமான 6 ஏக்கர் விருந்தினர் மாளிகையை நடிகர் மோகன் பாபு வாங்க விரும்பியதாகவும், அதற்கு செளந்தர்யா தரப்பு மறுப்பு தெரிவித்ததால் மோகன் பாபு திட்டுமிட்டு இந்த கொலையை நிகழ்த்தியிருக்கிறார் என்றும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த மோகன் பாபு மீது கொலை புகார் கொடுத்ததாக வெளியான தகவல் தெலுங்கு சினிமா உலகையே அதிர வைத்தது.

இந்த நிலையில், செளந்தர்யாவின் கணவர் ரகு விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ‘கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் உள்ள சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது. சொத்து தொடர்பாக பரவி வரும் ஆதாரமற்ற செய்தியை நான் மறுக்க விரும்புகிறேன். மோகன் பாபு சார், எனது மனைவி சௌந்தர்யாவிடமிருந்து சட்டவிரோதமாக எந்த சொத்தும் பெறவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறேன். எனக்குத் தெரிந்தவரை, நாங்கள் அவருடன் எந்த நில பரிவர்த்தனையும் செய்யவில்லை.
கடந்த 25 வருடங்களாக மோகன் பாபுவை நான் அறிவேன். அவருடன் நல்ல நட்பைப் பகிர்ந்து கொள்கிறேன். நாங்கள் ஒரு குடும்பமாக இருக்கிறோம். மோகன் பாபுவுடன் நாங்கள் எந்தவித நில விற்பனை செய்யவில்லை என்பதை நான் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்.மோகன் பாபுவை நான் மதிக்கிறேன். இந்த உண்மையை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இது போன்ற தவறான செய்திகளை பரப்பாமல் இருக்குமாறு உங்களை அனைவரிடமும் நான் கேட்டுக் கொள்கிறேன். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.