கன்னட திரையுலகின் முன்னணி நடிகராகவும் 10க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி இயக்குநராகவும் வலம் வருகிறவர் உபேந்திரா. இவர் தமிழில் விஷாலின் சத்யம் படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தற்போது லோகேஷ் - ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார். ரஜினியுடன் நடிப்பது எனது கனவு என சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் உபேந்திரா இயக்கி நடித்துள்ள படம் ‘யுஐ’(Ui). லஹரி பிலிம்ஸ் எல்.எல்.பி மற்றும் வீனஸ் என்டர்டெய்னர்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். சைன்ஸ் ஃபிக்சன் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் பான் இந்தியா படமாக தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நேற்று(20.12.2024) வெளியானது. கலவையான விமர்சனங்களை இப்படம் பெற்று வருகிறது.
படம் ஆரம்பித்து டைட்டில் கார்டு போடுவதற்கு முன், ‘புத்திசாலிகள் முட்டாள்களை போல் தெரிவார்கள், முட்டாள்கள் தங்களை புத்திசாலிகளை போல் காட்டிக்கொள்வார்கள், நீங்கள் முட்டாளாக இருந்தால் முழு படத்தையும் பாருங்கள், நீங்கள் புத்திசாலியாக இருந்தால் திரையரங்கை விட்டு வெளியேறுங்கள்” என்ற வரிகள் இடம் பெற்றுள்ளது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.