ஜெயம் ரவி, கடந்த 2009ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. இந்த சூழலில் ஜெயம் ரவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த செப்டம்பரில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து ஆர்த்தி, ஜெயம் ரவியின் விவாகரத்து தன்னிச்சையாக எடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும், ஜெயம் ரவியின் இந்த முடிவு, முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்றும் கூறியிருந்தார். இதனிடையே ஜெயம் ரவி, ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதில் 2009ஆம் ஆண்டு தங்களுக்கு நடந்த திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி சமரச தீர்வு மையத்தில் ஜெயம் ரவியும் ஆர்த்தியும் கடந்த மாதம் ஆஜராகி 1 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரச தீர்வு எட்டப்படவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகினர். இருவரும் மனம்விட்டு பேச வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஜனவரி 18ஆம் தேதி வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.