சமீப காலமாக வில்லனாக நடித்து வரும் எஸ்.ஜே ,சூர்யா, கடைசியாக தமிழில் தனுஷின் ராயன் படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தெலுங்கில் நானி நடித்த சூர்யாவின் சனிக்கிழமை படத்தில் நடித்திருந்தார். இப்போது ஷங்கர் - கமல் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 3, ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகும் கேம் சேஞ்சர், விக்ரம் - அருண்குமார் கூட்டணியில் உருவாகும் வீர தீர சூரன், கார்த்தி - மித்ரன் கூட்டணியில் உருவாகும் சர்தார் 2 மற்றும் விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வரும் எல்.ஐ.கே. உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் எஸ்.ஜே.சூர்யா தற்போது துல்கர் சல்மான் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஆர்டிஎக்ஸ் பட இயக்குநர் நிகாஸ் ஹிதாயத் இயக்கவுள்ளார். ஆக்க்ஷன் பின்னணியில் உருவாக உள்ள இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இதுவரை தென்னிந்திய மொழிகளில் நடித்து வந்த எஸ்.ஜே சூர்யா, சமீபத்தில் விபின் தாஸ் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவாகும் படத்தில் நடிப்பதாகவும் இதன் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து தற்போது மீண்டும் ஒரு மலையாள படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கவுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.