![tvk executives campaign in plane to vote](http://image.nakkheeran.in/cdn/farfuture/364_Dp7Snz_ZjzIr8HMiEvWm3oKNiGye-otmJdKAURM/1710161641/sites/default/files/inline-images/417_5.jpg)
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய், 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை எனத் தெரிவித்து 2026 ஆம் ஆண்டுதான் நமது இலக்கு என்று தமிழக சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து செயல்பட்டு வருகிறார். கட்சியின் முதல் கூட்டமாக, கடந்த பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் விஜய் நேரில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் காணொளி வாயிலாகப் பேசியதாக கட்சியினர் தகவல் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து த.வெ.க-வின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனர். இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி படுதீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய அணியைத் தொடங்கியும் நிர்வாகிகள் நியமனம் பற்றிய அறிவிப்பும் வெளியானது. பின்பு திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த எருக்குவாய் ஊராட்சியில் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த 7 பேருக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இலவசமாக வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து த.வெ.க.வின் உறுப்பினர் சேர்க்கையை கட்சியின் தலைவர் விஜய் கடந்த 8 ஆம் தேதி தொடங்கி வைத்தார். மேலும் முதல் உறுப்பினராக அவர் இணைந்ததோடு கட்சியின் உறுதிமொழியை அறிவித்து, ‘பிடித்திருந்தால் இணையுங்கள்’ என வீடியோ வாயிலாகத் தெரிவித்திருந்தார். இதையடுத்து ஒரே நாளில் 20 லட்சம் பேர் இணைந்துள்ளதாக அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர். இப்போது 50 லட்சம் பேர் இணைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், த.வெ.க.வினர் விமானத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னையிலிருந்து மதுரை செல்லும் விமானத்தில் த.வெ.கவினர் விஜய்யின் கொடியை ஏந்தி பயணிகளிடம், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.கவிற்கு வாக்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.