
பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் கடைசியாக '2018' படத்தில் நடித்திருந்தார். கேரளாவில் வெள்ளம் வந்தபோது ஏற்பட்ட சம்பவங்கள் குறித்துப் பேசியிருந்த இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் கேரளா திரையுலகில் அதிக வசூல் செய்த படம் என்ற பெயரைப் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் மொத்தம் 160 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் டோவினோ தாமஸின் அடுத்தடுத்த படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் டோவினோ தாமஸ் நடிப்பில் ‘அஜயன்டே ரண்டாம் மோஷனம்’, 'அன்வேஷிப்பின் கண்டேதும்' என இரண்டு படங்கள் தயாராகி வரும் நிலையில், புதிதாக அகில் பால் மற்றும் அனாஸ் கான் இருவரும் இணைந்து இயக்கவுள்ள 'ஐடென்டிட்டி' படத்தில் நடிக்கிறார். இக்கூட்டணி ஏற்கனவே 'ஃபாரன்சிக்' என்ற வெற்றி படத்தைக் கொடுத்தது. எனவே, எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால் முன்னணி நடிகையை கதாநாயகியாக நடிக்க வைக்க படக்குழுவினர் முயற்சி செய்து வருகின்றனர். அண்மையில் இப்படத்தில் த்ரிஷா நடிக்கவுள்ளதாக தகவல் வந்த நிலையில் அதனை உறுதி செய்து இது தொடர்பான போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
இப்படம் மூலம் மூன்றாவது முறையாக மலையாளத்தில் நடிக்கிறார் த்ரிஷா. முன்னதாக நிவின் பாலி நடிப்பில் வெளியான 'ஹே ஜூட்' படத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது மோகன்லால் நடிப்பில் உருவாகும் 'ராம் பார்ட் 1' படத்தில் நடிக்கிறார். இப்படம் இன்னும் வெளியாகவில்லை.