Skip to main content

“ரஞ்சித் பேசியது அரசியல் அறியாமை” - தொல். திருமாவளவன் எம்.பி 

Published on 12/08/2024 | Edited on 12/08/2024
thirumavalavan replied ranjith issue

90-களில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமான ரஞ்சித், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி நடித்துள்ள படம் கவுண்டம்பாளையம். கடந்த 9ஆம் தேதி இப்படம் வெளியான நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஞ்சித், ஆணவக் கொலைக் குறித்த கேள்விக்கு, “அது எமோஷனலாது, நம்முடைய டுவீலரை ஒருவன் திருடிச் சென்றால், உடனே கோவப்பட்டு அவனை அடிக்கின்றோம். அதுபோல தன்னுடைய வாழ்க்கையே தனது பிள்ளைகள் தான் என வாழ்கிறவன், பிள்ளைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிற மாதிரி ஒரு விஷயம் நடக்கும் போது, பெற்றோரின் கோவம் அக்கறையில் தான் வருகிறது. அது வன்முறை அல்ல, கலவரமும் அல்ல. என்னை எதிர்ப்பவர்கள் இந்தப் படத்தை வந்து பாருங்கள்” என்றார். 

அவரின் பேச்சுக்கு கடும் கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்த நிலையில், கடந்த 10 ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த ரஞ்சித், “நான் ஆணவக் கொலைக்கு ஆதரவாக என்றைக்காவது பேசியிருக்கிறேனா? நான் சொல்ல வந்த கருத்து வேறு. ஆனால் சமூகத்தில் நான் ஆணவக் கொலைக்கு ஆதரவானவன் எனச் சித்தரித்துவிட்டார்கள், அதை எப்படி நான் செய்வேன். காதலில் பாதிக்கப்படும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இரண்டு பேரும் ஒரு தாய்க்கு குழந்தைகள்தான்.  எந்த குழந்தை பாதிக்கப்பட்டிருந்தாலும் அந்த அம்மாவிற்கு கண்ணில் தண்ணி வரும். உலகத்தில் வன்முறை தீர்வாகாது.  அவ்வளவு இறக்கமில்லாத மனிதனா நான்.  நான் ஆணவக் கொலைக்கு ஆதரவானவன் அல்ல . தயவு செய்து அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடுங்கள். அது மிகவும் தவறானது சட்டத்தை மதிக்கின்றவன் நான். எல்லா தாய் தந்தைகளையும் மதிக்கிறவன் நான். என் சிந்தனையில் சுத்தமாக அந்த மாதிரியான எண்ணங்கள் கிடையாது” என்று பதிலளித்தார்.  

இந்நிலையில் வி.சி.க தலைவர் திருமாவளவன், ரஞ்சித் பேசியது குறித்து செய்தியாளர்களிடம் பதிலளித்துள்ளார். அவர் பேசுகையில், “ஆணவக் கொலையை வன்முறையல்ல என்று சொல்லுவது அரசியல் அறியாமையாக இருக்க வேண்டும் அல்லது வணிக நோக்கமாக இருக்க வேண்டும். ஆணவக் கொலை என்ற பெயரில் திரைப்படமெடுத்து சமூக நல்லிணக்கத்திற்கு எதிராகப் பேசுவது, கருத்துகளைப் பரப்புவது, நாட்டுக்கு நல்லதல்ல. அவர்கள் இது போன்ற கருத்துகளைப் பேசுவது கவலையளிக்கிறது” என்றார்.

சார்ந்த செய்திகள்