கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். அதேபோல சீனா தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வந்தாலும் சீனா அதிகாரபூர்வமாக வெளியிட மறுக்கிறது. சமீபத்தில் நடத்த மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.
இதனைத் தொடர்ந்து இந்திய எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்தியர்கள் பலரும் சீனப் பொருட்களை வாங்க மாட்டோம் என்று சாலைகளில் சீனப் பொருட்களை எரித்துத் தங்களின் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். அதேபோல சீனாவின் பிரபல செயலி(App)களையும் தங்களின் மொபைல்களில் இருந்து நீக்கி வருகின்றனர்.
'சார்லி சாப்ளின்', 'கோவை பிரதர்ஸ்', 'இங்கிலீஸ்காரன்', 'மகாநடிகன்' உள்பட பல படங்களை இயக்கியவர், சக்தி சிதம்பரம். இப்போது யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் ‘பேய் மாமா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் தனது வீட்டில் இருக்கும் சீனப் பொருட்களைத் தீயிட்டு எரித்து எதிர்ப்பைக் காட்டியுள்ளார் சக்தி சிதம்பரம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்திய வீரர்கள் 20 பேர்களைக் கொன்று மிரட்டிக் கொண்டிருக்கும் சீனா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். அது தயாரித்த பொருட்களை யாரும் பயன்படுத்தக் கூடாது. அதற்கு நாமே முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக சீனத் தயாரிப்பு பொருட்களைத் தீவைத்து எரித்தேன்.
என் வாழ்நாளில் இனிமேல் சீனத் தயாரிப்புகளைப் பயன்படுத்த மாட்டேன். நான் இப்போது இயக்கி வரும் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் உள்பட படக்குழுவினர் அனைவரிடமும் சீனத் தயாரிப்பு பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள். எரித்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.