
சூர்யா தற்போது ரெட்ரோ மற்றும் வாடிவாசல் படத்தை கைவசம் வைத்துள்ளார். இதனிடையே அகரம் ஃபவுண்டேஷன் எனும் அறக்கட்டளையை நடத்தி வரும் அவர் அதன் மூலம் ஏழை மாணவர்களின் கல்வி கட்டணத்திற்கு உதவி செய்து படிக்க வைத்து வருகிறார்.
இந்த நிலையில் சென்னை தி.நகரில் அகரம் ஃபவுண்டேஷனின் புதிதாக கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் கலந்து கொண்ட சூர்யா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், “2006ல் சின்ன அறையில் யோசித்த ஒன்று இன்று ஆலமரமாக வளர்ந்திருக்கிறது. அந்த ஆண்டு கஜினி முடித்த சமயத்தில் இவ்வளவு அன்பு கொடுத்த இந்த சமூகத்துக்கு அர்த்தமுள்ளதாகத் திருப்பி கொடுக்க வேண்டும் என நினைத்த போது ஞானவேல் ஒரு கேள்வி கேட்டார். ‘இன்றைக்கும் முதல் தலைமுறை மாணவர்கள் இருக்காங்க. பெற்றோர்களால் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தினக்கூலி வேலை தேடுற மாணவர்கள் இருக்காங்கன்னு கேட்டதுதான், அகரம் ஃபவுண்டேஷன் தொடங்குவதற்குக் காரணம். அப்போது 10-க்கு 10 அறையில் தொடங்கினோம். பின்பு படிப்படியாக உயர்ந்து இந்த நிலைக்கு வந்துள்ளது.
2010ல் நூறு மாணவ மாணவிகளை படிக்கவைக்க வேண்டும் என ஆசைப்பட்டோம். அப்போதே பத்தாயிரம் விண்ணப்பங்கள் வந்தது. இப்போது 700 மாணவர்களை வருஷத்துக்குப் படிக்க வைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனாலும் பத்தாயிரம் விண்ணப்பங்கள் வந்து கொண்டிருக்கிறது. தேவைகள் குறையவே இல்லை. இப்போதும் நம்ம சமூகத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகள் இருக்கிறார்கள். பணம் இல்லாமல் படிக்க முடியாத மாணவர்களும் இருக்கிறார்கள். அகரமில் படித்த மாணவர்கள், ‘கல்வியே எங்கள் ஆயுதம்’ என சொல்லி நான் பெற்றதை இந்த சமூகத்துக்குக் கொடுப்பேன் என இருக்கிறார்கள். இன்னும் 20 வருஷத்துக்கு இதே வீரியத்தோடு செயல்படும். அதற்கான காரணம் முன்னாள் மாணவர்கள் அவர்களின் வாழ்கையில் அமைத்துக் கொண்ட விஷயம்தான். 20 வருஷத்துக்கு பிறகு இந்த இடம் கிடைத்திருக்கிறது. இந்த கட்டிடம் படிப்பிற்காக கொடுக்கும் நன்கொடைகளை வைத்து உருவாக்கியது கிடையாது. எனக்கு கிடைத்த வருமானத்தின் மூலம் உருவாக்கியது. நன்கொடையாக வரும் பணத்தைப் படிப்பிற்காக மட்டுமே செலவழிக்கிறோம்.
அரசு பள்ளி மாணவர்களிடம் இருந்து பத்தாயிரத்துக்கும் மேலான விண்ணப்பங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதில் 700 மாணவர்களோட வாழ்க்கையை மாற்ற முடிகிறது. இன்னும் நிறைய பேருடைய அன்பு தேவைப்படுகிறது. பணம் மட்டும் இல்லாமல் எல்லாருடைய நேரமும் தேவைப்படுகிறது. அகரம் 20 வருஷமாக நடந்து வருவதற்கு முக்கிய காரணம் தன்னார்வலர்கள்தான். இந்த விஷயத்தை மக்களால் மக்கள் மூலம் செய்யும் ஒன்று. இந்த அலுவலகத்தில் வொர்க் ஷாப், புத்தக வெளியீடு உள்ளிட்ட பல விஷயங்கள் நடக்கவிருக்கிறது. இந்த இடம் எங்களுக்கு தாய் வீடு மாதிரி” என்றார்.