
ஸ்லேட் பென்சில் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தனராஜ் கொரனானி இயக்க, சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராமம் ராகவம்’ . ஃபிப்ரவரி 21 அன்று வெளியாகும் இப்படத்தின் முன்வெளியீடு விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில், ‘சாட்டை’ பட இயக்குநர் அன்பழகன், ‘சங்கத்தலைவன்’ பட இயக்குநர் மணிமாறன், ‘வெள்ளை யானை’ இயக்குநர் சுப்ரமணிய சிவா, ‘சித்திரைச் செவ்வானம்’ இயக்குநர் ஸ்டன்ட் சில்வா, ‘ரைட்டர்’ பட இயக்குநர் பிராங்க்ளின், ‘திரு. மாணிக்கம்’ பட இயக்குநர் நந்தா பெரியசாமி, ‘தலைக்கூத்தல்’ பட இயக்குநர் ஜெயபிரகாஷ், தம்பி ராமையா, இயக்குநர் மலையன் கோபி, இயக்குநர் கார்த்திக், பிக்பாஸ் வெற்றியாளர் முத்துக்குமரன், நடிகர் தீபக், ஹரீஷ் ஆகியோருடன் சமுத்திரக்கனி, இயக்குநர் தனராஜ், தயாரிப்பாளர் பிருத்தவி போலவரபு, கதாநாயகி மோக்ஷா, ப்ரமோதினி, பாடலாசிரியர் முருகன் மந்திரம் முதலிய படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி பேசுகையில், “தன்ராஜ் போகிற போக்கில் ஒன்றரை நிமிஷத்துல கதை சொன்னான். கேரவன்ல இருந்து இறங்கி ஷாட்க்குப் போற கேப்பில், கதையைச் சொன்னான். ‘நிமிர்ந்து நில்’ தெலுங்கு ஷூட்டிங்கில் எல்லா வேலையும் செய்வான். அப்போ அவன் மீது தனிக் கவனம் வந்தது. ‘ஒரு கதை கேட்டேன். நீ நடிச்சா நல்லாயிருக்கும்’ என விமானம் கதையைக் கேட்க வச்சது அவன்தான். விமானம் இயக்குநரின் கதை தான் ராமம் ராகவம். இவன் கேட்டு வாங்கியிருக்கான்.
கதையைக் கேட்டதும், ‘அப்பா கேரக்டரா சரி பண்ணிடுவோம் போடா' என்றேன். 'அண்ண' என்றான். 'நீ சொல்ல வர்றது முக்கியமான விஷயம். சமூகத்துக்குத் தேவையான விஷயம். தமிழ்நாட்டுல கூட இப்படி 15 கேஸ் நடந்திருக்கு. வெளில இருந்து பார்த்தா அப்பா-மகன் கதையா தெரியும். ஆனா உள்ளுக்குள்ள வச்சிருக்கிறது ரொம்ப ஸ்ட்ராங்கான விஷயம். இந்தப் படம் பார்த்து, ஒரே ஒரு பையன் திருந்திட்டா போதும், இந்தப் படம் மாபெரும் வெற்றி. நல்ல படைப்பை ரசிகர்கள் என்றுமே கைவிட்டதில்லை. பணத்தை விட, எத்தனை பேரை மனசு கொள்ள அடிக்குதுங்கிறதுதான் ஒரு படைப்புக்கு முக்கியம். ராமம் ராகவம் அப்படிப்பட்ட படம்” என்றார்.