
அனுராக் கேஷ்யப் மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில், அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், டீ.ஜே.அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள படம் பேட் கேர்ள். இப்படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குநரான வர்ஷா பரத்தின் இயக்கியுள்ளார். அமித் திரிவேதி இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் பிராமணப் பெண்களின் வாழ்க்கையைத் தவறாக சித்தரித்துள்ளதாக சில விமர்சனங்களும் எழுந்தது. இதனிடையே இப்படம் 54வது ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் விருது வென்றது. விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இப்படம் குறித்த ரிலீஸ் அப்டேட் இன்னும் வெளியாகவில்லை. சமீபத்தில் மிஷ்கின், இப்படத்தை பேசியே வெளிவரவிடாமல் பண்ணிவிட்டோம் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் இப்படத்தின் டீசர் ஒரு மோசமான எடுத்துக்காட்டு என நடிகை சனம் ஷெட்டி கூறியுள்ளார். அவர், “சம உரிமை என்பது பத்து பேருடன் படுப்பேன். தம் அடிப்பேன், கஞ்சா என்பது கிடையாது. சம உரிமை என்பது சமமாக வாய்ப்புகளை வழங்குவது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சம அளவு வாய்ப்புகள் இருக்கிறதா... இல்லை. நம்ம இண்டஸ்ட்ரியில் ஹீரோவுக்கு கொடுக்கிற சம்பளமும் ஹீரோயினுக்கு கொடுக்கிற சம்பளமும் சமமாக இருக்கிறதா... இல்லை. கதாநாயகனை தொடர்பு கொள்ளும் விதமும் கதாநாயகியை தொடர்பு கொள்ளும் விதமும் ஒன்றாக இருக்கிறதா? எங்களை படம் நடிக்க கூப்புடுவாங்க எனப் பார்த்தால் படுக்கத் தான் கூப்புடுறாங்க. இதுபோன்ற விஷயங்களில் சம வாய்ப்பு கொடுக்க வேண்டும். பள்ளி குழந்தைகளை கஞ்சா அடி, பத்து பேருடன் படு என்று சொல்வது எப்படி சரியாக இருக்கும்.
எனக்கு அந்த டீசர் தப்பாத்தான் தெரிஞ்சது. கலாச்சாரத்தை சீரழிப்பதாக நிறைய பேர் சொல்றாங்க. அதையும் தாண்டி ஒரு பொது அறிவு கூட அதில் இல்லை. அர்ஜுன் ரெட்டி படத்தில் ஒரு ஆண் பண்ணும் போது எதுவும் கேள்வி கேட்கவில்லையே என சொல்கிறார்கள். இது அப்படி கிடையாது. இதில் ஹீரோயின் ஒரு பள்ளி மாணவி. மைனர்ஸ் இது போன்று செயல்களில் ஈடுபட்டால் அது குற்றம். இப்படிப்பட்ட தவறான விஷயங்கள் இருக்கும் டீசரை பெரிய மனிதர்கள் நியாயப்படுத்துவது இன்னும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று” எனக் குறிப்பிட்டுள்ளார்.