Skip to main content

”என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு சும்மா ஒன்னும் பெயர் கிடைக்கல” - ஸ்டண்ட் சில்வா பேட்டி 

Published on 15/09/2022 | Edited on 15/09/2022

 

stunt silva

 

ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில், அருண் விஜய், பாலக் லால்வானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ’சினம்’ படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் சினம் படம் குறித்தும் அருண் விஜய் குறித்தும் ஃபைட் மாஸ்டர் ஸ்டண்ட் சில்வா பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

“சினம் வழக்கமான போலீஸ் படமாக இருக்காது. படத்தில் முக்கியமான ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளன. அவையெல்லாமே கதையோடு ஒன்றிப்போகிற அளவுக்கு நேர்த்தியாக இயக்குநர் எழுதியிருந்தார். படத்தின் சண்டைக்காட்சிகளை 100 சதவிகித மெனக்கெடலுடன் உருவாக்கியிருக்கிறோம். 

 

செட்டில் விஜய்குமார் சார் தயாரிப்பாளர்போலவே நடந்துகொள்ளவில்லை. எல்லோருக்கும் முன்பே செட்டிற்கு வந்து என்ன தேவை என்பதை பார்த்து பார்த்து செய்வார். செட்டில் என்ன பிரச்சனை வந்தாலும்சரி, அதை எப்படி உடனே சரி செய்யவேண்டும் என்பதை நன்றாக தெரிந்து வைத்திருந்தார். 

 

இந்தப் படத்திற்கான சண்டைக்காட்சியின் போது எல்லா விஷயங்களுமே எனக்கு உற்சாகத்தை கொடுத்தன. அருண் விஜய்க்கு எதிராக நடித்த அனைவருக்குமே மூன்று மாதங்களாக பயிற்சி கொடுத்தேன். அவருடைய எனர்ஜி எந்த அளவிற்கு இருக்கும் என்பது நமக்குத் தெரியும். இப்படி பண்னுங்க, அப்படி பண்ணுங்க என்று நாம் சொல்வதையெல்லாம் அமைதியாக கேட்பார். ஆனால், ஆக்‌ஷன் என்று சொன்னதும் ஏதோ பேய் புகுந்ததுபோல மாறிவிடுவார். 

 

அவரை பார்த்த உடனேயே செமயா இருக்கார்டா, இப்படி ஒரு ஷாட் வைக்கலாம் என்று நமக்கே தோன்றும். அந்த அளவிற்கு உடலை எப்போதும் தயார்படுத்தியே வைத்திருக்கிறார். என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு பெயர் கிடைத்தது என்றால் அது சும்மா கிடைக்கவில்லை. தொடர்ந்து 5 நாட்கள் ஒருசொட்டு தண்ணீர்கூட குடிக்காமல் இருந்துதான் அந்த சிக்ஸ்பேக் கொண்டுவந்தார். இவ்வளவு அர்ப்பணிப்போடு இருக்கக்கூடிய ஒருத்தர் கிடைக்கும்போது, அவரை எந்த அளவுக்கு நாம் பயன்படுத்த வேண்டும். அவரை சரியாக திரையில் காட்டவில்லை என்றால் நமக்கு திறமையில்லை என்றுதான் அர்த்தம்”.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் ஸ்டண்ட் சில்வாவின் மாப்பிள்ளையும் மரணம் 

Published on 24/05/2018 | Edited on 26/05/2018
stunt silva

 

 


தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி நடந்த 100வது நாள் போராட்டத்தின் போது போலிசாரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில்  13 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் இந்த சம்பவத்தால் கடும் அதிர்ச்சி அடைந்த பல்வேறு அரசியல் தரப்பினரும், பொதுமக்களும் தமிழக அரசுக்கு எதிராக கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்துக்கு  ரஜினி, கமல், விஷால், சத்யராஜ்  உட்பட பல திரையுலக பிரபலங்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், வீடியோ பதிவாகவும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்ற நிலையில் போராட்டத்தில் தனது உறவினரும் உயிரிழந்துள்ளதாக ஸ்டண்ட் சில்வா அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... "எனது அன்புத்தங்கையின் கணவர் ஆருயிர் மாப்பிள்ளை J. செல்வராஜ் ஸ்டெர்லைட் போராட்டத்தில் அநியாயமாக போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். மிக்க வேதனையோடு பகிர்கிறேன்" என வேதனையோடு பதிவிட்டுள்ளார்.