![sj Surya](http://image.nakkheeran.in/cdn/farfuture/nU3_hzKDkZj5fNzjKhmzplZRibc0-E2i3YoNOigrQXA/1643961254/sites/default/files/inline-images/138_10.jpg)
விஜய் தமிழ்செல்வன் இயக்கத்தில் சி.எஸ்.கிஷன், நந்தினி ராய் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள அஷ்டகர்மா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் மற்றும் எஸ்.ஜே.சூர்யா, தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
விழாவில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசுகையில், "இந்தப் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். படத்தின் இயக்குநர் விஜய்யை முன்னரே சந்தித்திருக்கிறேன். அவர் சினிமா மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். ட்ரைலரும், பாடல்களும் சிறப்பாக உள்ளன. குறிப்பாக டி.ஆர் சார் பாடியுள்ள பாடல் சிறப்பாக உள்ளது. படத்தின் நாயகன் கிஷன் சார், ஒட்டுமொத்த சினிமா துறைக்குமே பணம் கொடுக்கக்கூடிய அளவிற்கு பின்புலம் கண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் சினிமாவில் நடித்து கஷ்டப்படவேண்டும் என்ற அவசியமே இல்லை. ஆனால், பெரிய நடிகராக வேண்டும் என்ற போராட்டத்தை மனதிற்குள் வைத்துக்கொண்டு, மிகவும் அர்ப்பணிப்போடு இந்தப் படத்தில் நடித்துள்ளார்.
சினிமாத்துறை ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமெல்லாம் பார்க்காது. யாரை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளும். பஸ் கண்டக்டரையும் சூப்பர் ஸ்டாராக ஏற்றுக்கொள்ளும். பணக்காரரையும் பெரிய ஸ்டாராக ஏற்றுக்கொள்ளும். எவ்வளவு அர்ப்பணிப்போடு அவர்கள் நடித்துள்ளார்கள் என்பதுதான் முக்கியம். சாதிக்க வேண்டும் என்ற ஆசையோடு நாயகன் கிஷன் அடியெடுத்து வைத்துள்ளார். அந்த எண்ணமே அவருக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தரும்" என்று கூறினார்.