நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த தம்பதி முனியாண்டி மற்றும் அம்பிகாபதி. இவர்களுக்கு சின்னத்துரை என்ற 17 வயது மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்களது வீட்டில் சில தினங்களுக்கு முன்பு இரவு 10.30 மணியளவில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அத்துமீறி நுழைந்து சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இருவரும் படுகாயமடைந்த நிலையில் உறவினர்கள் மூலம் மீட்கப்பட்டு, நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் நடத்திய விசாரணையில், சின்னத்துரை ஒரு வார காலம் பள்ளிக்கு போகாமலே இருந்துள்ளார். இதையடுத்து பள்ளி நிர்வாகம் பெற்றோரைத் தொடர்பு கொண்டு மகனைப் பள்ளிக்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளது. பள்ளிக்கு சென்ற சின்னத்துரையிடம் ஆசிரியர்கள் விசாரித்த போது பள்ளியில் சில மாணவர்கள் தன்னை தாக்குவதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த அந்த தொந்தரவு செய்த மாணவர்கள், வீடு புகுந்து அரிவாளால் வெட்டியுள்ளது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2 மாணவர்கள் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்த அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஜி.வி. பிரகாஷ், மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் உள்ளிட்ட பிரபலங்களைத் தொடர்ந்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்த ட்விட்டர் பதிவில், "கொடூரமான வெட்கக்கேடான பரிதாபகரமான சாதி வெறியர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே சீனு ராமசாமி, "நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை உடன்படிக்கும் பள்ளி மாணவர்கள் அரிவாளால் வெட்டிய வெறிச் செயல் கொடுமையிலும் கொடுமை. காயம்பட்ட மாணவர்களுக்கு நீதிதான் சமூகநீதி. மாணவச் செல்வங்கள் உடல்நலம் தேறி விரைந்து இல்லம் வரவேண்டுகிறேன்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் பாடலாசிரியர் யுகபாரதி, "சாதீய சமூகத்தின் கொஞ்சமும் மாறாத 'படி'நிலைகள், கோபத்தையும் கண்ணீரையும் சேர்த்தே கேட்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், நிரந்தர தீர்வும் இந்த மண்ணில் எப்போதுதான் கிடைக்குமோ?" எனத் தனது ஃபேஸ் புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை உடன்படிக்கும் பள்ளி மாணவர்கள் அரிவாளால் வெட்டிய வெறிச்
செயல்
கொடுமையிலும் கொடுமை.
காயம்பட்ட மாணவர்களுக்கு நீதிதான் சமூகநீதி
மாணவச்
செல்வங்கள் உடல்நலம் தேறி விரைந்து இல்லம் வரவேண்டுகிறேன்.#Nanguneri— Seenu Ramasamy (@seenuramasamy) August 11, 2023