'கூடல் நகர்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தனது இரண்டாவது படத்திலலேயே தேசிய விருது வாங்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர் சீனுராமசாமி. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான 'மாமனிதன்' படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. மேலும் பல சர்வேதேச திரைப்பட விருதுகளையும் வாங்கியுள்ளது. அடுத்ததாக 'மெஹந்தி சர்க்கஸ்' ஹீரோ மாதம்பட்டி ரங்கராஜை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். இதனை சீனுராமசாமியின் பிறந்தநாளான கடந்த 13ஆம் தேதி மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்திருந்தார்.
அதே நாளில் சீனு ராமசாமி எழுதிய கவிதைகளை 'சொல்வதற்குச் சொற்கள் தேவையில்லை' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை தொகுத்து அதனை பரிசாக அவரது மனைவி தர்ஷணாவும் மகள்களும் தந்தனர். இந்த புத்தகத்தை நடிகர் மோகன் வெளியிட்டிருந்தார். இந்த புத்தகத்தை பாராட்டி மற்றும் சீனுராமசாமிக்கு வாழ்த்து தெரிவித்தும் முதல்வர் மு.க ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் , "இயக்குநர் சீனுராமசாமி அத்தலைப்பிலேயே தனது கவித்துவத்தைக் காட்டியிருப்பார். திரைமொழியில் மட்டுமல்லாமல், தமிழ்மொழியிலும் அவருக்கிருக்கும் ஆளுமையை வெளிப்படுத்துவதாக அவரது கவிதைகள் அமைந்திருக்கின்றன" என பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சீனு ராமசாமி முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ஒரு நீண்ட நெடிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "இலக்கியம் பெற்ற கவிதை மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கும், என்னை கண்டெடுத்து தென்மேற்கு பருவக்காற்றில் இந்த ஆதரவற்றவனை அடையாளம் காட்டிய ஆசான் வைரமுத்து அவர்களுக்கும் நேசமிகு அம்மா தமிழச்சி தங்கபாண்டியன் தங்கை மரியசீனா ஜான்சன், எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் இதய நன்றிகள்" என தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில், "இந்நூலுக்கு வாழ்த்துமடல் மாண்புமிகு நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு கணவனுக்கு ஆச்சர்யமூட்டும் பரிசு தருவதற்காக ஒரு மனைவி தொகுத்த கவிதை தொகுப்பிற்கு ஊக்கமளித்து பாராட்டி ஒரு கடிதம் தந்து வாழ்த்திய உங்கள் உயர்ந்த உள்ளம் பற்றி நினைப்பதா? அல்லது என் போன்ற கலைஞர்களுக்கு நீங்கள் தரும் இதயப்பூர்வமான அன்பை எண்ணி நெகிழ்வதா எனத் தெரியவில்லை அய்யா? என்னால் இதை முதலில் நம்ப முடியவில்லை. முதல்வரின் கனிந்த இதயத்திற்கு முன் வணங்கி நிற்கிறேன்" என பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளது.
இலக்கியம் பெற்ற கவிதை மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களுக்கும்,
என்னை கண்டெடுத்து தென்மேற்கு பருவக்காற்றில் இந்த ஆதரவற்றவனை
அடையாளம் காட்டிய ஆசான் @Vairamuthu அவர்களுக்கும் நேசமிகு அம்மா @ThamizhachiTh தங்கை மரியசீனா ஜான்சன், எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் இதய நன்றிகள் pic.twitter.com/DclkRtmrPC— Dr.Seenu Ramasamy (@seenuramasamy) October 15, 2022