Skip to main content

“நான் சங்கியும் கிடையாது, உ.பி-யும் கிடையாது” - ஆர்.ஜே பாலாஜி 

Published on 23/11/2024 | Edited on 25/11/2024
rj balaji speech in Sorgavaasal trailer launch

ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சொர்க்கவாசல். ஸ்வைப் ரைட் ஸ்டூடியோஸ் மற்றும் திங் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள இப்படத்தில் செல்வராகவன், நட்டி, கருணாஸ், சானியா ஐயப்பன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ள இப்படம் சிறை வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. 

கடந்த மாதம் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. காமெடி கலந்த கதாபாத்திரத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ஆர்.ஜே பாலாஜி இந்தப் படத்தில் சீரியஸான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இப்படம் வருகிற 29ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் லோகேஷ் கனகராஜ், அனிருத் உள்ளிட்ட திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். விழாவில் ஆர்.ஜே. பாலாஜி பேசுகையில், “இந்த படத்தின் டீமுக்கு 5 வருஷம் பயணம் இருக்கு. ரைட்டர், டைரக்டர், கேமராமேன் என எல்லாருக்கும் இதுதான் ஃபர்ஸ்ட் படம். அவர்கள் எடுத்த விதத்தை ரசித்தேன். பட ரிலீஸுக்கு இன்னும் 4 நாள் இருக்கிறது. நான் இன்னும் படத்தை முழுசாக பார்க்கவில்லை. அதற்கு காரணம் படக்குழு மேல் நான் வைத்திருக்கும் நம்பிக்கைதான். இயக்குநர் என்னிடம் இருந்து வேறு விதமான நடிப்பை வாங்கியிருக்கிறார்.  

டீசர் வெளியான பிறகு இயக்குநருக்கு நிறைய ஹீரோஸ் ஃபோன் பன்னியிருக்காங்க. அவங்க அத்தனை பேரும் எனக்கு ஃப்ரண்ட்ஸ் தான். ஆனால் எனக்கு ஃபோன் பண்ணி நல்லாயிருக்குன்னு சொல்லவில்லை. அவருக்கு ஃபோன் பண்ணி பாராட்டியது எனக்கு பெருமை தான். படம் வெளியான பிறகு நிறைய படங்கள் அவருக்கு வர வேண்டும். அவருடன் வேலை பார்த்தவர்கள் சிறப்பாக செய்தார்கள். அதனால் அவர்களை அடுத்து நான் இயக்கும் படத்தில் சேர்த்துக்கொண்டேன்.   

ஒரு சினிமாவை எடுத்து வெளியில் வைத்துவிட்டால், அது நல்லாயிருக்கு நல்லாயில்லை என விமர்சனம் செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. அது அவர்களின் சுதந்திரம். ஒவ்வொருவரின் ஃபோனையும் நாம் பிடுங்க முடியாது. கதை நல்லாயிருக்கும் பட்சத்தில் அது கண்டிப்பாக பேசப்படும். இப்போது பொதுவெளியில் பேசுவதற்கு பயமா இருக்கு. எது செய்தாலும் எதாவது அடையாளத்தை குத்துவிடுவாங்களா என தோணுது. படத்தின் ட்ரைலர் வரப்போகிறது என போஸ்ட் போடுகிறேன். அதுக்கு கீழ் படத்தின் டிஸ்ட்ரிபியூட்டர் மேல் இருக்கும் கோவத்தில் என்னை திட்டிட்டு போறாங்க. அதே போல் வேறொரு ஆள் மேல் இருக்கும் கோவத்தில் என்னை திட்டுறாங்க. இன்னொருத்தர் ‘இவன் பாவாடை, இவன அழிக்கனும்’ என திட்டுறார். பாவடை என்றால் என்ன என்று முதலில் புரியவில்லை. ஆனால் நான் வேஸ்டி. 

நான் பாவடை கிடையாது என சொன்னதும் என்னை சங்கி என்பார்கள். நான் சங்கியும் கிடையாது. அதனால் எந்த கட்சியின் ஐ.டி.விங்காக இருந்தாலும் சரி அவர்களுக்கு ஒரு கோரிக்கை. நீங்க அரசியல் பன்னுங்க. சினிமாவில் வேண்டாம். அதில் ஏன் உங்க எனர்ஜியை வேஸ்ட் பன்றீங்க. அரசியல் வாதிங்கக்கூட நீங்க சண்டைபோட்டுக்கங்க. சினிமாவ விட்டிடுங்க. அதே மாதிரி ரசிகர்கள். எல்லா படத்தையும் பார்க்கலாம். இவங்க படம் வந்தால் அவங்க அடிக்கனும் அவங்க படம் இவங்க அடிக்கனும்... இப்படி இருந்தால் உங்க எனர்ஜியும் வேஸ்ட் ஆகும். படம் நல்லாயில்லை என்றால் அதை சொல்லுங்கள். வரவேற்கிறோம். ஆனால் டார்கெட் பண்ணி அடிக்கிறது கொஞ்சம் பயமா இருக்கு. நான் பாவடை, ஃபேண்ட், சங்கி, உ.பி, அவர் ரசிகர், இவர் ரசிகர் என எதுவும் கிடையாது. ஒரு நல்ல படம் எடுத்திருக்கோம். எல்லாருடைய சப்போர்ட்டும் தேவை. அப்படி இருந்தால் தான் இந்தப் படமும் லப்பர் பந்து, வாழை மாதிரி எல்லார்கிட்டையும் போய் சேரும்” என்றார்.  

சார்ந்த செய்திகள்