
கர்நாடகா அரசு சார்பில் 16-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா கலந்து கொள்ளாத நிலையில் அவர் புறக்கணித்துவிட்டதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரவி கனிகா கடுமையாக சாடினார். மேலும், “கர்நாடகாவில் கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் தனது சினிமா கரியரை தொடங்கிய ராஷ்மிகா, தன்னுடைய கரியரை இங்கு தொடங்கி வளர்ந்த பின்பு கன்னடத்தை புறக்கணிக்கிறார். அதற்கு நாம் பாடம் கற்பிக்க வேண்டாமா?” என்று கூறியிருந்தார். மேலும் கன்னட ஆர்வலர் டி.ஏ. நாராயண கவுடா, ராஷ்மிகா தன்னை ஒரு கன்னடர் என்பதை விட ஹைதராபாத்தைச் சார்ந்தவராக காட்டிக்கொள்கிறார் என விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் ராஷ்மிகாவுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் கோடவா தேசிய கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் நாச்சப்பா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கர்நாடகா உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “ஒரு சட்டமன்ற உறுப்பினரால் ராஷ்மிகா மிரட்டப்படுகிறார். எங்கள் சமூகத்தை சேர்ந்த ராஷ்மிகா தனது திறமையாலும் கடின உழைப்பாலும் இந்தியத் திரைத்துறையில் புகழையும் வெற்றியும் பெற்றுள்ளார். அமிதாப் பச்சன் மற்றும் சல்மான் கான் போன்ற முக்கிய பாலிவுட் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சொந்தமாக ஒரு முடிவெடுக்க அவருக்கு சுதந்திரம் இருக்கிறது. அது மதிக்கப்பட வேண்டும். அவரை வற்புறுத்தக்கூடாது.
காவிரி நதியை பெரிதும் நம்பியுள்ள மண்டியா மக்கள், காவிரியின் அன்பு மகளும், அந்தப் பகுதியைச் சேர்ந்த புகழ் பெற்ற நடிகையுமான ராஷ்மிகா மந்தனாவை கொடுமைப்படுத்துபவர் ஒரு எம்.எல்.ஏ. என்பது முரண்பாடாக உள்ளது. அவரை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது, கோடவாலாந்து மக்களையும், காவிரிப் பகுதி மக்களின் கண்ணியத்தையும் அவமதிக்கும் செயல்” எனக் குறிப்பிட்டுள்ளார். ராஷ்மிகா தற்போது ‘தி கேர்ள் ஃபிரண்ட்’(தெலுங்கு) குபேரா(தமிழ் மற்றும் தெலுங்கு) மற்றும் சிக்கந்தர்(இந்தி) ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.