இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை படமாக்கப்படுகிறது. முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் தர்மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கு 800 என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு போஸ்டர் அண்மையில் வெளியானது. முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இதுமட்டுமல்லாமல் ஈழ தமிழர்கள் பலரும் முத்தையா முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பல எதிர்ப்புகளையும் தாண்டி இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது.
மேலும், இந்த படத்தில் அரசியல் இல்லை என்றும் முரளிதரனின் வாழ்க்கை வரலாறை சம்மந்தப்படுத்திதான் படம் உருவாகிறது என்று தெரிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.
இதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் ராதிகா சரத்குமார் விஜய் சேதுபதிக்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், “முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய்சேதுபதி நடிக்கக்கூடாது என சொல்பவர்களுக்கு வேறு வேலை இல்லையா? சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைமை கோச்சாக முத்தையா முரளிதரன் இருக்கிறாரே அதுகுறித்து ஏன் எந்தவொரு கேள்வியும் எழுப்பவில்லை. விஜய் சேதுபதி நடிகர் என்பதால் மட்டும் கட்டுப்படுத்த நினைக்காதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.