ரஜினிகாந்த் கடந்த 30ஆம் தேதி உடல் நலக்குறைவுக் காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும் செரிமான பிரச்சனை காரணமாக அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. பின்பு தமிழக சுகாதாரத்துறை, ரஜினி உடல்நிலை குறித்து அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை எனவும், பெரிய அளவிலான அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ரஜினி பூரண குணமடைய வேண்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பிரார்த்தனை செய்து வருவதாக எக்ஸ் வலைதளப் பக்கத்தில் தெரிவித்தனர். இதையடுத்து ரஜினி உடல்நலம் குறித்து அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம், ரஜினிக்கு இதயத்தில் இருந்து பிரியும் இரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அதை சரி செய்யும் வகையில் அந்த இடத்தில் ஸ்டென்ட் கருவி பொருத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இன்னும் இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்புவதாக கடந்த 1ஆம் தேதி குறிப்பிடப்பட்டது. அதன் படி ரஜினிகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
இந்த நிலையில் ரஜினிகாந்த், தான் குணமடைய வேண்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள அறிக்கையில், “நான் மருத்துவமனையில் இருக்கும் போது. நான் சீக்கிரம் உடல் நலம் பெற என்னை வாழ்த்திய அனைத்து அரசியல் நண்பர்களுக்கும். திரைப்பட துறையை சார்ந்தவர்களுக்கும் எனது அனைத்து நண்பர்களுக்கும். நலவிரும்பிகளுக்கும். பத்திரிகை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். மற்றும் நான் நலம் பெற பிராத்தனைகள் செய்த மனதார வாழ்த்திய என்மீது அளவில்லா அன்பு வைத்திருக்கும் என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என உருக்கமுடன் குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்துள்ள நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார். இதில் த.செ.ஞானவேல் இயக்கியுள்ள வேட்டையன் படம் வருகிற 10ஆம் தேதி வெளியாகிறது.
🙏🏻 pic.twitter.com/E0efF64ju5— Rajinikanth (@rajinikanth) October 4, 2024