Skip to main content

மீண்டும் தள்ளிப்போகும் ‘துருவ நட்சத்திரம்’ - வருத்தம் தெரிவித்த கெளதம் வாசுதேவ் மேனன்

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

 postponed again dhruva natchathiram

 

கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் 'துருவ நட்சத்திரம்'. இப்படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கெளதம் மேனன் நிறுவனம் மற்றும் இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பு முடிந்த நிலையில், சில பிரச்சனைகள் காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகியும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. பின்பு அனைத்து பிரச்சனைகளும் முடிந்து படத்தின் அப்டேட் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்தது. ஒருவழியாக இன்று இப்படம் திரைக்கு வருவதாகப் படக்குழு அறிவித்தது. 

 

இந்த நிலையில், இந்தப் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கக் கோரி ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், “சூப்பர் ஸ்டார் என்ற தலைப்பில் சிம்புவை வைத்து படம் இயக்க கௌதம் மேனன் கடந்த 2018 ஆம் ஆண்டு 2 கோடியே 40 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டார். ஆனால் பட வேலைகள் நடைபெறாத நிலையில், கௌதம் மேனன் முன்பணத்தை திருப்பி தரவில்லை. எனவே அந்த தொகையை திருப்பி அளிக்காமல் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நாளை காலை 10.30 மணிக்குள் 2 கோடியே 40 லட்ச ரூபாய் பணத்தை கௌதம் மேனன் திருப்பி அளிக்க வேண்டும். மேலும் தொகையை கொடுக்காமலிருக்கும் பட்சத்தில் துருவ நட்சத்திரம் படத்தை இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வெளியிடக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

 

இந்நிலையில் இன்று பணத்தை செலுத்தி திரைக்கு ’துருவ நட்சத்திரம்’ வந்து விடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் இன்று வெளியாகவில்லை என்றும் அதற்காக மன்னிப்பும் கேட்டு  இயக்குநர் கெளதம் மேனன் அவரது எக்ஸ் தள பதிவில் பதிவிட்டுள்ளார். “மன்னிக்கவும். துருவ நட்சத்திரம் படத்தை இன்று வெளியிட எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்தோம். ஆனால் முடியவில்லை. என்றாலும் எங்கள் படத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவு நெகிழ வைக்கிறது. இன்னும் சில தினங்களில் வருவோம்”  என்றிருக்கிறார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்