வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி, கெளதம் வாசுதேவ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விடுதலை பாகம் 2. எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே விடுதலை பாகம் 1 வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. குறிப்பாக ட்ரைலரில் இடம்பெற்றிருந்த வசனங்கள் சினிமாவை தாண்டி அரசியல் வட்டாரங்களிலும் கவனம் ஈர்த்தது.
பலரது எதிர்பார்ப்பை தாண்டி கடந்த 20ஆம் தேதி இப்படம் வெளியானது. முதல் பாகத்தில் பல்வேறு உண்மை சம்பவங்களை நினைவுபடுத்தும் வகையில் ஒன்று சேர்த்து இயக்கியிருந்த வெற்றிமாறன் இந்தப் படத்திலும் அதை தொடர்ந்திருக்கிறார். இந்தப் படத்தில் வாத்தியார் கதாபாத்திரம் எதற்காக பொது வாழ்க்கைக்கு வந்தார், பின்பு ஏன் ஆயுதம் ஏந்திய போராட்டத்துக்கு மாறினார், அதன் பிறகு அவர் என்ன ஆனார்... என பல்வேறு கேள்விகளுக்கு இந்தப் படம் பதிலளிக்கிறது.
இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படத்தை பார்த்த வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி., “முக்கியமான அரசியல் படைப்பு” என பாராட்டியிருந்தார். இந்த நிலையில் தனுஷ் விடுதலை பாகம் 2 படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “விடுதலை 2 உண்மைக்கு நெருக்கமாக விறுவிறுப்பாகவும் ஈர்க்கக்கூடியதாகவும் இருந்தது. முதல் ஷாட்டில் இருந்து கடைசி ஷாட் வரை ரசித்தேன். மாஸ்டர் மேக்கர் வெற்றிமாறனின் சிறப்பான படைப்பு. இளையராஜாவின் பின்னணி இசை மிகவும் பிடித்திருந்தது. நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு பிரமாதம். மிகுந்த ஆர்வத்துடனும் அன்புடனும் இந்தப் படத்தைத் தயாரித்ததற்காக எல்ரெட் குமாருக்கு பாராட்டுகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Viduthalai 2 is raw gripping and engaging. Was hooked from the first shot till the last. Great work by master maker Vetrimaaran. Loved the score from Ilayaraja sir. All the actors and technicians have done their part so well. R.Velraj cinematography was amazing. Kudos Elred Kumar…— Dhanush (@dhanushkraja) December 23, 2024