கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.இ.எம்.எல். இயங்கி வருகிறது. இதில் ஒப்பந்த தொழிலாளர்களாக 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி 20 நாட்களுக்கு மேலாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களது போராட்டங்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த தொழிற் சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதையடுத்து திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தும் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசி வெளியிட்ட வீடியோவில், “தொழிலாளர்களின் கோரிக்கை அடிப்படையானது. அவர்களின் நியாயமான கோரிக்கையை புரிந்து கொண்டு போராட்டத்தை தீவிரப்படுத்தாமல் நிறைவேற்றும்படி நீலம் பண்பாட்டு மையம் சார்பில் கோரிக்கை வைக்கிறேன்” எனக் கூறி தொழிலாளர்களின் போராட்டங்கள் வெற்றி பெற வாழ்த்தினார்.
பா.ரஞ்சித் கடைசியாக விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கியிருந்தார். இதையடுத்து கெத்து தினேஷை வைத்து வேட்டுவம் என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கவுள்ளார். மேலும் சார்பட்டா 2 படத்தை கைவசம் வைத்துள்ளார்.