திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வருட ஆஸ்கர் விழாவில், நீலகிரி முதுமலையைச் சேர்ந்த பொம்மன் - பெள்ளி தம்பதியை வைத்து எடுக்கப்பட்ட 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' என்ற ஆவணக் குறும்படம், சிறந்த ஆவணக் குறும்படம் பிரிவில் விருது வென்றது. ராஜமௌலில் இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலும் சிறந்த பாடல் என்ற பிரிவில் விருது வாங்கியது.
இதில் சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) என்ற பிரிவில் இந்தாண்டு இந்தியாவிலிருந்து மலையாள படமான '2018' படம் அனுப்பப்பட்டது. ஆனால் இப்படம் இறுதிப் பரிந்துரை பட்டியல் வரை செல்லவில்லை. அதற்கு முந்தைய சுற்றிலேயே வெளியேறியது. இதையடுத்து இந்தியாவில் நடந்த கதையை வைத்து எடுக்கப்பட்ட ‘டு கில் எ டைகர்’ என்ற ஆவணப்படம், சிறந்த ஆவணப்படம் பிரிவில் நாமினேஷனுக்கு தேர்வானது. இப்படம் ஜார்க்கண்டில், கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் ஆளாக்கப்பட்ட தனது மகளுக்கு நீதி போராட்டத்தை நடத்திய தந்தை குறித்து எடுக்கப்பட்டது ஆகும். இப்படமும் விருது பெறவில்லை.
இந்த நிலையில் 96வது ஆஸ்கர் விருது விழா வழக்கம் போல் லாஸ் ஏஞ்சல்ஸின் ஓவேஷன் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல், ஒவ்வொரு விருதாக அறிவித்து வந்தார். அந்த வகையில் சிறந்த ஆடை வடிவமைப்பு விருது வழங்குவதற்கு முன் பேசிய அவர், ஆஸ்கர் வரலாற்றில் எந்த தருணம் பைத்தியக்காரத்தனமாக இருக்க முடியும். 46வது ஆஸ்கர் விருது விழா நடக்கும் போது, டேவிட் நெவின் எலிசபெத் டெய்லரை அறிமுகம் செய்து கொண்டிருந்தபோது ஒருவர் ஆடையில்லாமல் மேடையில் ஓடினார். அதே போல் இன்றைய நிகழ்வில் ஆடையில்லாமல் ஒருவர் மேடையில் ஓடி சென்றால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பார்க்க முடியுமா? அது பைத்தியக்காரத்தனம்போல் இருக்காது? என கேட்டார். உடனே அரங்கம் சிரிப்பலையில் மூழ்கியது.
பின்பு மேடையின் பின்புறம் ஓரத்திலிருந்து பிரபல குத்து சண்டை வீரர் ஜான் சீனா, எட்டிப் பார்க்க அவர், தொகுப்பாளரை அழைத்து மேடையில் நிர்வாண நிலையில் ஓடும் எண்ணம் இப்போது எனக்கு தோன்றவில்லை. அது சரியாக இருக்கும் என நினைக்கவில்லை. இது ஒரு அருமையான நிகழ்ச்சி. இதில் போய் ஆடையில்லாமல் மேடையில் ஓடச் சொல்லும் ஐடியாவுக்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும். ஆண் உடல் ஒன்றும் நகைச்சுவைக்கானது அல்ல என்று ஜாலியாக பேசினார். பின்பு ஆடையில்லாமல் மெல்ல மெல்ல மேடையின் நடுப்பகுதிக்கு வந்து அனைவரின் முன்பும் தோன்றினார். பின்பு மைக்கில் பேசிய அவர், ஆடை ரொம்ப முக்கியமானது என கூறினார். இதையடுத்து தொகுப்பாளர் வந்து, விருதுக்கான நாமினேஷன் பட்டியலை அறிவித்தார். அதன் பிறகு மேடையில் உள்ள விளக்குகளை அனைத்து, ஜான் சீனாவிற்கு சிலர் உடை எடுத்துவந்து அணிவித்துவிட்டு சென்றனர். இந்த செயல் அரங்கத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.