![Not to mention Hindi, but ... - Actor Aari speech](http://image.nakkheeran.in/cdn/farfuture/KSZ3QAPTvlQUqm7Y8vngjKLJzl7jLy_AQ0WQtHy5ZO4/1650364782/sites/default/files/inline-images/Untitled-1_344.jpg)
இயக்குநர் சிவ மாதவ் இயக்கத்தில் கே.பாக்யராஜ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘3.6.9’. இப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் பிளாக் பாண்டி, அஜய் கண்ணன், சுகைல், சத்தி மகேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பி ஜி எஸ் தயாரித்து நடித்துள்ளார். கார்த்திக் ஹர்ஷா இசையமைத்துள்ளார். ஒரே நேரத்தில் 24 கேமராக்களை கொண்டு சுமார் 450 தொழில்நுட்ப கலைஞர்களுடன் இந்த திரைப்படத்தை 81 நிமிடங்கள் தொடர்ச்சியாக படமாக்கி படக்குழு மாபெரும் சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஆரி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய நடிகர் ஆரி, "பான் இந்தியா படங்கள் அதற்கான திட்டமிடல்களோடு உருவாகும். 'பீஸ்ட்' படம் தமிழ் பிராந்திய மொழி படம். அதை தாண்டி பக்கத்தில் எவ்ளோ தூரம் போகுமோ அங்க போய் படத்தை பாத்துக்கலாம். பழனிக்கு ஏன் மொட்டை அடிக்க வரவில்லை என்று கேட்டால் அவர் திருப்பதிக்கு போறவராக இருப்பார். அவர் பழனிக்கு வரணும்னு அவசியம் இல்லை. நம்ம திருப்பதிக்கு போகும் என்று எண்ணினால் தான் திருப்பதிக்கு போய் மொட்டை அடிக்கணும். அதனால் நாம எடுக்கிற படம் வியாபார தளத்தை தாண்டி தமிழ் சினிமாவிற்கு எப்போதுமே ஒரு அடையாளமான ஒரு படம். நம்ம தமிழ் சினிமாவில் தான் 'ஒத்த செருப்பு' படத்தில் ஒரு ஆள் நடித்து உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்தோம்.
அந்த காலத்தில் இருந்து இன்று வரைக்கும் நூறு சினிமாக்களில் சிறந்த படம் எனும் லிஸ்டில் நம்ம ஆளுங்க எடுத்த நாயகன் படம் இடம்பெற்று இருக்கிறது. ஒரு படம் சரியாக போகவில்லை என்பதால் தமிழ் சினிமாவே சரியில்லை என்று சொல்வதை விட தமிழ் சினிமா இன்னும் சரியான தரமான படங்களை கொடுக்க நம்ம முயற்சி பண்ணனும் என்கிற விவாதம் தான் தேவை. அதை தவிர தமிழ் சினிமாவில் இருக்கிற அத்தனை படங்களும் அத்தனை இயக்குநர்களும் மட்டமானவர்கள், படமே எடுக்க தெரியாதவர்கள் மாதிரி ஒரு பிம்பத்தை சமீப காலங்களில் ஒரு விவாதம் நடைபெறுகிறது. அந்த விவாதம் மூலமாக சினிமாவை விமர்சித்து பணம் சம்பாதிக்கிறார்கள். அது எந்த வகையிலும் சினிமாவை வளர்த்து எடுக்காது. சினிமாவில் நல்லது பேசினாலும் காசு, கெட்டது பேசினாலும் காசு அப்படிங்கிறதுல ஒரு விவாதம் ஆகிவிட்டது. நாம சாதனையாளராக மாறுவதை விட நம் படைப்பு சாதனையானதாக இருக்க வேண்டும் என்பது தான் இங்க முக்கியம்.
பெரிய படங்களை போல் அனுபவம் வாய்ந்த கலைஞர்கள் இப்படத்தில் கிடையாது. இவர்களுடைய மிக பெரிய சொத்து இவர்களின் தன்னம்பிக்கை மட்டும் தான். அந்த நம்பிக்கையில் தான் பத்திரிக்கையாளர்களிடம் வெறும் நாற்பது வினாடிகளுக்கு ஒரு டீசர் போட்டு காண்பித்து தன்னம்பிக்கையோடு பேசுகிறார்கள். வார்த்தை தான் ஒரு இடத்துல நம்பிக்கையாக படமா கொடுக்குது. அடுத்து படத்தின் ட்ரைலர், முன்னோட்டம் ரீலீஸ் செய்யும் போது இன்னும் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்ப்பதற்கான இது ஒரு சின்ன முன்னோட்ட விழா. அதை தெளிவாக பதிவு செய்ய விரும்புகிறேன். இப்படத்தில் பணியாற்றிய அத்தனை கலைஞர்களுக்கு நடிகர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மாபெரும் மனித உழைப்பு இப்படத்திற்கு பின்னாடி இருக்கிறது. படத்தின் மொத்த நீளம் 81 நிமிடம். அந்த 81 நிமிடமும் தவம் இருந்தால் மட்டுமே அதை சரியா நேர்த்தியாக பண்ண முடியும். ஒரு ஆள் தவறு செய்தாலும் முடிஞ்சிது. நான் நேசிக்கும் சினிமாவிற்கு திருப்பி செய்யும் விஷயம் இந்த புது முயற்சி. புது முயற்சிக்கு எப்போதுமே ஒரு வரவேற்பு இருக்கும். இந்த ஒரு சின்ன முயற்சி தான் நாளை ஒரு பெரிய முயற்சியாக பார்க்கப்படணும். எவ்ளோ பெரிய பான் இந்தியா படமாக இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு வந்தா தமிழ் தான் பேசுது. எந்த மொழிக்கும் எந்த படம் போனாலும் அந்த மொழி பேசினால் தான் காசு. நாங்க இங்க காசு கட்டுகிறது நாங்க வாழ்வதற்கான வரியை உங்களிடம் கொடுக்கிறோம்.
அதனால் நாங்க என்ன பேசணும், எந்த மொழிய பயிற்றுவிக்கணும் , எந்த மொழியை வளர்த்தெடுக்கணும் என்பது நம்மளுடைய உரிமை. உலகத்துக்கெல்லாம் அவரவர்கள் மொழி அவர்களுக்கானது. தமிழ்நாட்டுடைய தாய் மொழி தமிழ் நமக்கானது. எனவே இணைப்பு மொழி நமக்கு தமிழ் தான். இந்தி வேணாம்னு சொல்லல, தமிழுக்கு நோ சொல்லுவதுதான் வேணாம் என்கிறோம். இந்தி உங்களுடைய மொழி அதை நீங்களே வச்சிக்கோங்க, தமிழ் என் தாய் மொழி அது எப்போதும் என் அடையாளம்" என பேசினார்.