
டைட்டானிக் படப் புகழ் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ, அழிந்து வரும் விலங்குகளைப் பாதுகாப்பதில் அடிக்கடி தனது ஆதரவைக் காட்டியுள்ளார். 2021 ஆம் ஆண்டில், கலபகோஸ் தீவுகளை மீட்டெடுக்கவும், அப்பகுதியில் இருந்து மறைந்துபோன ராட்சத ஆமைகள் மற்றும் முதல் மோக்கிங்பேர்ட் போன்ற உயிரினங்களை மீண்டும் கொண்டு வரவும் 43 மில்லியன் டாலர்களை அவர் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஃப்ளோரியானா தீவை மீட்டெடுக்க உள்ளூர் நிபுணர்களுடன் சேர்ந்து, ஒரு தொண்டு நிறுவனத்தையும் அவர் தொடங்கினார். இவரது ஈடுபாட்டை கௌரவிக்கும் வகையில் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள உயிரினங்களுக்கு இவரது பெயரை குறிக்கும் வகையில் பெயர் வைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இமயமலை பகுதியில் மட்டும் தென்படக்கூடிய புதிய வகை பாம்பிற்கு ‘ஆங்கிகுலஸ் டிகாப்ரியோய்’ எனப் பெயரிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தற்போது புதிய வகை தவளை இனத்திற்கு இவரது பெயரை குறிக்கும் வகையில் ‘ஃபிலோனாஸ்டஸ் டிகாப்ரியோய்’(Phyllonastes Dicaprioi) எனப் பெயரிடப்பட்டுள்ளது. சான் பிரான்சிஸ்கோ குய்டோ பல்கலைக்கழகம், ஈக்வடாரின் தேசிய பல்லுயிர் நிறுவனம் மற்றும் ஈக்வடார்கத்தோலிக்க பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடார் நாட்டில் எல் ஓரா மாகாணத்தில் உள்ள மேற்கு மலை காட்டில் ஏழு புதிய இனங்களை கண்டறிந்துள்ளனர். அதில் ஒன்றாக ஒரு தவளை இனத்திற்கு தற்போது லியோனார்டோ டிகாப்ரியோ குறிக்கும் வகையில் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த தவளை இனங்கள் காடழிப்பு மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக காடுகள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வாழ்கின்றன. இந்த தவளை இனம் மற்ற உயிரினங்களைப் போலல்லாமல், அதன் உடலில் கருமையான புள்ளிகள் மற்றும் தனித்துவமான விரல் வடிவம் போன்ற தோற்றத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.