Skip to main content

“ஏ.ஆர். ரஹ்மானை யாரும் அந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பதே இல்லை” - இளம் இசையமைப்பாளர் தென்மா ஆதங்கம்

Published on 14/09/2022 | Edited on 14/09/2022

 

Music Director Tenma

 

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, போத்தனூர் தபால் நிலையம், நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட பல படங்களின் இசையமைப்பாளரான தென்மாவை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் தன்னுடைய அனுபவங்கள் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதன் சிறு பகுதி பின்வருமாறு....

 

“நட்சத்திரம் நகர்கிறது என்னுடைய கேரியரில் மிக முக்கியமான படம். தனியாளாக இந்த சமூகத்தில் கஷ்டப்பட்டு, இன்று கடின உழைப்பிற்கான பலன் கிடைத்திருக்கிறது. இதை ஒரு தொடக்கமாக பார்க்கிறேன். இந்தப் படத்தில் கமிட்டான போது என்னால் இதைப் பண்ண முடியுமா என்று நிறைய பேர் நினைத்தார்கள். வாழ்க்கையில் பொன்னான வாய்ப்பு அரிதாகவே கிடைக்கும் என்பதால் இதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது மட்டும்தான் என் மனதில் இருந்தது. 

 

கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் ஆல்பம் பண்ணும்போது சாதிய ரீதியான விமர்சனங்கள் நிறைய வந்தன. நம்முடைய நோக்கம் வேறு என்பதால் அதை நான் பொருட்படுத்தமாட்டேன். இந்த ஆல்பம் பண்ணாத என்றுகூட சிலர் சொன்னார்கள். நான் சின்ன வயதிலிருந்தே பெரியாரை பின்பற்றுபவன் என்பதால் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சிலருக்கு புரிய வைத்திருக்கிறேன். சிலருக்கு நாம் எவ்வளவு சொன்னாலும் புரியாது, அவர்களே ஒருநாளில் புரிந்துகொள்வார்கள் என்று நினைத்துக்கொள்வேன். அதேநேரத்தில், தமிழ்நாட்டில் இதற்கு வரவேற்பில்லை என்றும் சொல்ல முடியாது. தமிழ்நாட்டிலேயே நிறைய விருதுகள் கொடுத்திருக்கிறார்கள். சமகாலத்தில் ஒரு சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தாலும் எங்களுக்கும் நல்ல ஆதரவு கிடைக்கத்தான் செய்கிறது.

 

கானா என்பதே இந்தி வார்த்தைதான். அது ஒரு சமூகத்திற்கான பாடல் அல்ல. ஒரு சமூகத்திலிருந்து வந்த பாடலாக இருக்கலாம். அது முழுக்க முழுக்க உழைக்கும் மக்களின் இசையே. சாதிக்கு எதிரான மனநிலை இன்று எல்லா மக்களிடமும் வந்துவிட்டது. அம்பேத்கரை நிறைய பேர் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். 

 

நான் சின்ன வயதிலிருந்தே ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிரமான ரசிகர். அவரை எப்போதும் இசையுலகில் ஒரு புரட்சியாளராகத்தான் பார்ப்பேன். ஆனால், அந்தக் கண்ணோட்டத்தில் அவரை யாரும் பார்ப்பதில்லை. ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் அவரது இசை மாறிவருகிறது. தொடர்ந்து ஏதாவது செய்துகொண்டே இருக்கிறார். அவரைப் பார்க்கும்போதே நாமும் இப்படி தொடர்ந்து உழைக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். அவருடைய வந்தே மாதரம் ஆல்பம் ரொம்பவும் வித்தியாசமாக இருக்கும். கருத்தம்மா ஆல்பம் இப்போது கேட்டாலும் அப்பவே இதெல்லாம் எப்படி பண்ணார் என்று வியப்பாக உள்ளது”. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ரஞ்சித் செய்ததை பார்த்து என் அசிஸ்டண்ட் சிரிச்சுட்டாங்க” - 'நட்சத்திரம் நகர்கிறது’ அனுபவம் பகிரும் தென்மா

Published on 14/09/2022 | Edited on 14/09/2022

 

Music Director Tenma

 

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, போத்தனூர் தபால் நிலையம், நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட பல படங்களின் இசையமைப்பாளரான தென்மாவை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பகிர்ந்துகொண்ட நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் குறித்து பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு....

 

“பா.ரஞ்சித் அவருக்கு என்ன வேண்டுமென்று நிறைய இன்புட்ஸ் கொடுப்பார். அவர் சொல்லும்போது அது சுவாரசியமாக இருக்கும். பாடி, நடனமாடி கூட இன்புட்ஸ் கொடுப்பார். அதெல்லாம் நமக்கே ஆச்சர்யமாக இருக்கும். என்னுடைய அசிஸ்டண்ட்டெல்லாம் என்ன இப்படிலாம் பண்றாருனு சிரிச்சிட்டாங்க. 

 

நட்சத்திரம் நகர்கிறது ஸ்க்ரிப்ட் படிச்சுட்டு என்னோட சில கருத்துகளைச் சொன்னேன். அதெல்லாம் ரஞ்சித் கவனமாக குறித்துக்கொண்டார். அவர் இருக்கும் உயரத்திற்கு என்னிடம் கருத்துகேட்க வேண்டிய அவசியமே கிடையாது. திறந்த மனதுடன் கருத்து கேட்டு அதை அவர் ஏற்றுக்கொண்டது எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. 

 

இந்தப் படத்தை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று சந்தேகம் இருந்தது. பாடல் வெளியான பிறகும்கூட எனக்கு நிறைவாக இல்லை. ஆனால், ரிலீஸிற்குப் பிறகு கிடைத்த வரவேற்பை பார்த்தபோது ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. நீலம் ப்ரொடக்‌ஷனோடு இணைந்து பணியாற்றுவதால் எனக்கு எந்த இடத்திலும் வாய்ப்பு மறுத்ததில்லை. எல்லோரும் எல்லா நிறுவனத்தோடும் இணைந்துதான் பணியாற்றுகிறார்கள். வேறு சிலருக்கு அதுபோல வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், எனக்கு அதுபோல நேர்ந்ததில்லை".