Skip to main content

“மன்னிப்பு கேட்கும் ஆள் நானில்லை” - மன்சூர் அலிகான் திட்டவட்டம்!

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

 Mansoor Alikhan Press meet

 

1990 மற்றும் 2000களில் வில்லனாக பிரபலமடைந்த மன்சூர் அலிகான், அதன் பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் விஜய், த்ரிஷா நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 19 ஆம் தேதி வெளியான லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

 

இதையடுத்து அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான், லியோ படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறியிருந்தார். இது சர்ச்சையாகியுள்ளது. இதற்கு த்ரிஷா,  “மிகவும் கேவலமான அவமரியாதையான பேச்சு. வன்மையாகக் கண்டிக்கிறேன்” என எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார். பின்பு லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், உள்ளிட்ட பல்வேறு திரைப் பிரபலங்கள் மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர். 

 

இதனைத் தொடர்ந்து நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, இந்த விவகாரத்தை மகளிர் ஆணையத்தின் மூத்த அதிகாரிகளுக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார். மேலும் இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம், “நடிகைகளை பற்றி அவதூறாக பேசிய மன்சூர் அலிகான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்” எனக் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

 

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இன்று பத்திரிகையாளர்களை மன்சூர் அலிகான் சந்தித்தார். அப்போது, “நடிகை த்ரிஷா பற்றி நான் தவறாகப் பேசவில்லை. உண்மையில் நான் அவரைப் பாராட்டிதான் பேசினேன். அதற்காக அவர் எனக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். நடிகர் சங்கம் இவ்விவகாரத்தில் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. ஒரு விஷயம் சர்ச்சையானால் அதுபற்றி என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் எந்த விளக்கமும் கேட்கவில்லை. என் மீது தவறாக நடவடிக்கை எடுத்துள்ளனர். 4 மணி நேரத்துக்குள் அவர்கள் இந்த நடவடிக்கையை வாபஸ் பெற வேண்டும். என்னைப் பற்றி மக்களுக்குத் தெரியும். அவர்கள் என் பக்கம் நிற்கிறார்கள். நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கக்கூடிய ஆள் இல்லை.” என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்