கடந்த 2014ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் செளந்தர்யா இயக்கத்தில் வெளியான படம் 'கோச்சடையான்'. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் 'மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட்' நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தை சேர்ந்த முரளி என்பவர் கோச்சடையான் படத்திற்காக 'ஆட் பீரோ' நிறுவனத்தைச் சேர்ந்த அபிர்சந்த் நஹாவர் என்பவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்தார். இந்தக் கடன் தொடர்பாக முரளி தாக்கல் செய்த ஆவணங்களுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதக் கையொப்பம் செய்திருந்தார்.
பின்பு முரளி கடனாக பெற்ற பணத்தை திருப்பி தராததால் முரளி மற்றும் லதா ரஜினிகாந்த் மீது கடந்த 2015-ஆம் ஆண்டு பெங்களூரு மாநகர 6-வது கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் அபிர்சந்த் நஹாவர். இந்த வழக்கை விசாரித்த அல்சூர் கேட் போலீஸார் லதா ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனை சட்டம் 196,199, 420, 463 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிகையில் தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக்கோரி லதா ரஜினிகாந்த் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், லதா ரஜினிகாந்த் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளில் 196, 199, 420 உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி அவர் மீதான வழக்கில் இருந்து 3 பிரிவுகளும் ரத்து செய்யப்பட்டன. மேலும் அவர் மீதான 463 பிரிவு குறித்து கீழமைநீதிமன்றம் விசாரிக்கலாம் என உத்தரவிட்டது. இதனையடுத்து லதா ரஜினிகாந்த் சார்பில் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மற்றும் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை முழுமையாக ரத்து செய்ய கோரியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது லதா ரஜினிகாந்த் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் தங்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார். மேலும் மனுதாரருக்கு எதிரான விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். அதையடுத்து நீதிபதிகள், லதா ரஜினிகாந்த்துக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகா அரசு மற்றும் எதிர்மனுதாரர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.