சீனு ராமசாமி இயக்கத்தில் நேற்று(20.09.2024) வெளியான திரைப்படம் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’. அருளானந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு என்.ஆர் ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஏகன், யோகி பாபு, பிரிகிடா, சத்யா, ஐஸ்வர்யா தத்தா, பவா செல்லதுரை, மானஸி கொட்டாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்று வரும் நிலையில், படத்தில் நடித்த ஏகன், பிரிகிடா, சத்யா மூவரையும் நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக சந்திதோம். அப்போது படம் தொடர்பான பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்த அவர்கள், நிறத்தால் சினிமா வாய்ப்பு மறுக்கப்பட்டதா? என்ற கேள்விக்கும் பதிலளித்துள்ளனர்.
அப்போது சத்யா பேசுகையில், “ஒரு காலத்தில் நிறத்தை வைத்து விமர்சனம் இருந்தது உண்மைதான். அதே போல் தோற்றத்தை வைத்தும் விமர்சனம் இருந்தது. ஆனால் தற்போது நிறைய மாற்றங்கள் நடந்து வருகிறது. சினிமாவில் எதை எல்லாம் சரி என வரைமுறைப்படுத்தி வைத்தார்களோ அதை எல்லாம் உடைத்து இப்போது நிறைய ஆட்கள் வர ஆரம்பித்துவிட்டார்கள். என் நிறத்தை வைத்து என் குடும்பத்திலிருந்தே முதலில் விமர்சனங்கள் வந்தது. ஆனால் எனக்கு இப்போது வரும் சினிமா வாய்ப்புகள் எல்லாம் என்னுடைய நிறத்தாலும் திறமையாலும் மட்டுமே வருகிறது. இந்த படத்தின் மூலமாகவே அந்த விமர்சனங்கள் எல்லாம் உடைந்தது என்பது தெரிகிறது” என்று கூறினார்.
இதையடுத்து ஏகன், “என்னை பொருத்தவரை சினிமா துறையாக இருந்தாலும் சரி வேறு துறையாக இருந்தாலும் சரி ஆரம்பத்தில் மட்டும்தான் இதுபோன்ற விமர்சனங்கள் வரும். நம்ம திறமைக்கு மார்கெட் வேல்வ்யூ வந்துவிட்டால் இதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது. அந்த மார்கெட் வேல்வ்யூ வரும்வரை நிறத்தை பற்றிய விமர்சனங்கள் இருந்துகொண்டுதான் இருக்கும். இந்த படம் என் அப்பா தயாரிப்பதால் வாய்ப்பு சுலபமாக கிடைத்துவிட்டது. ஆனால் இதற்கு முன்னாடி நிறைய ஆடிசன் பண்ணியுள்ளேன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். அதெல்லாம் சொன்னால் யாரும் நம்மகூட மாட்டார்கள்” என்றார்
அதைத் தொடர்ந்து பிரிகிடா, “நிறத்தை வைத்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்கிறது. அது கதாபாத்திரத்திற்கு ஒத்துப்போகாமல் இருந்ததால் கூட மறுக்கபட்டிருக்கலாம். வெள்ளையாக இருப்பவர்கள்தான் ஆழகாக இருப்பார்கள் என்ற கருத்துகள் இப்போது படிப்படியாக மாறி வருகிறது. விரைவில் தமிழ் சினிமா முழுவதும் மாறக்கூடிய விஷயமாக இது அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இனி வரும் தலைமுறைகள் அதை பெரிதாக பார்க்க மாட்டார்கள் என்பது ஆணித்தரமாக தெரிகிறது. அதை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. திறமையை மட்டும் நம்பி வந்தால் போதும்” என்று பேசினார்.