கிச்சா சுதீப் நடிப்பில் அனுப் பண்டாரி இயக்கத்தில் ஃபேண்டஸி ஆக்ஷன் அட்வெஞ்சர் ஜானரில் உருவாகி உள்ள படம் 'விக்ராந்த் ரோணா'. 3டி வடிவில் கன்னடம், இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட கிச்சா சுதீப்பிடம் இந்தி மொழி தொடர்பாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கானுடன் ட்விட்டரில் ஏற்பட்ட கருத்துமோதல் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அஜய் தேவ்கான், ”என்னுடைய ட்வீட்டை படிக்கும்போது நீங்கள் கெட்ட மூடில் இருந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதனால் நான் அவருடன் சண்டை போட்டதுபோல உங்களுக்குத் தெரிந்துள்ளது. அஜய் தேவ்கன் என்னுடைய நண்பர்தான். என்னிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்று நினைத்தால் போன் செய்து கேட்டிருக்கலாம். ட்விட்டர் மாதிரியான பொதுவெளியில் கேட்டால் நானும் பொதுவெளியில்தான் பதில் சொல்ல வேண்டிவரும்.
நான் தொடங்கி வைக்காத ஒரு விவாதத்தை எப்படி முடித்தேன் என்பதற்காக என்னைக் குற்றம் சொல்லாதீர்கள். நான் அனைவருக்கும் மதிப்பு கொடுக்கக்கூடியவன். அவருக்கு தவறான புரிதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை என்னால் உணர முடிகிறது. அதில் தவறும் இல்லை. அதனால் எல்லாவற்றையும் சொன்ன பிறகுதான் என்னுடைய மொழியில் நான் ட்வீட் செய்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று சொன்னேன்” எனத் தெரிவித்தார்.