கலகலப்பு, ஜிகர்தண்டா, இன்று நேற்று நாளை என பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் கருணாகரன். மேலும் நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக கார்த்தியின் மெய்யழகன் படத்தில் நடித்திருந்தார். இப்போது சூர்யாவின் 44வது படத்தில் நடித்துள்ளார்.
சென்னை காரப்பாக்கத்தில் தனது மனைவி தென்றல் மற்றும் குழந்தைகளுடன் கருணாகரன் வசித்து வருகிறார். இந்த நிலையில் தங்களது வீட்டில் நகை திருடப்பட்டுள்ளதாக கருணாகரன் மனைவி தென்றல் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். 60 பவுன் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது வீட்டை சோதனை செய்த காவல் துறையினர் பீரோ உடைக்கப்படாததால் வெளி நபர்கள் திருடவில்லை என்பதை உறுதி செய்தனர். பின்பு சந்தேகத்தின் அடிப்படையில் வீட்டில் வேலை செய்பவர்களின் கை ரேகைகையை ஆய்வு செய்தனர்.
இதில் வீட்டில் பணிபுரியும் காரப்பாக்கம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த விஜயா என்பவர் நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரித்துள்ளனர். அதில் சிறுக சிறுக நகைகளை திருடியதாக ஒப்புக்கொண்டார். பின்பு அவரிடம் இருந்து திருடப்பட்ட நகைகள் கிட்டதட்ட 59 பவுன் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருட்டு நடந்து அதில் வீட்டு பணியாளர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.