
மலையாள நடிகை வின்சி அலோசியஸ் கேரளாவில் சமீபத்தில் நடந்த போதைப்பொருள் தடுப்பு நிகழ்ச்சியில் “போதைப்பொருள் பயன்படுத்தும் நடிகர்களுடன் எந்த படத்திலும் நடிக்க மாட்டேன்” எனப் பேசியிருந்தார். இது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது. இதையடுத்து விமர்சனத்திற்கு பதிலளித்த அவர், தனக்கு நடந்த அனுபவத்தை பகிர்ந்திருந்தார். அவர் பகிர்ந்திருந்ததாவது, “நான் ஒரு முக்கிய நடிகரின் படத்தில் நடித்து கொண்டிருந்த போது அவர் போதை பொருள் பயன்படுத்தி தகாத முறையில் நடந்து கொண்டார். அவருடன் நடிப்பது கஷ்டமாக இருந்தது. ஒரு நாள் படப்பிடிப்பில் எனது உடையில் சில சிக்கல் இருந்தது, அதை சரி செய்ய நான் சென்று கொண்டிருந்த போது திடீரென வந்த அந்த நடிகர் இதை சரி செய்ய நான் உதவுகிறேன் என சொல்லி என் கூடவே வருவதாக சொன்னார். இதனை அனைவரின் முன்பும் சொன்னதால் எனக்கு சங்கடமாகிவிட்டது.
பின்பு ஒரு காட்சியின் ரிஹர்சலின் போது அவரது வாயிலிருந்து வெள்ளை கலரில் ஒரு துளி டேபிலில் சிந்தியது. அதை பார்க்கையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது தெளிவாகத் தெரிந்தது. இது படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவருக்கும் தொந்தரவாக மாறியது” என்றார். இதனால் யார் அந்த நடிகர் என்ன சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி நிலையில் நடிகை வின்சி, நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது மலையாள நடிகர் சங்கம் மற்றும் திரைப்பட வர்த்தக சபை ஆகியவையிடம் புகார் அளித்தார். இந்த அத்துமீறல் சம்பவம் வின்சியும் ஷைன் டாம் சாக்கோவும் இணைந்து நடித்த ‘சூத்ரவக்யம்’ படத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. புகார் கொடுத்த வின்சிக்கு பெண்கள் கூட்டமைப்பான டபள்யூ.சி.சி. அவரது தைரியத்தை பாராட்டி ஆதரவு அளித்துள்ளது.
இதனிடையே கேரளாவில் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு அதிரடிப் படை ஒரு ஹோட்டலில் சோதனை நடத்திய போது அங்கிருந்து ஷைன் டாம் சாக்கோ தப்பி செல்வதாக சொல்லும் சி.சி.டி.வி. வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதனைத் தொடர்ந்து ஷைன் டாம் சாக்கோ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் இன்று எர்ணாகுளம் காவல்நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார். காலை முதலே அவரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கேரள காவல்துறையினர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரின் கேள்விக்கு ஷைன் டாம் சாக்கோ வழங்கிய பதில் திருப்திகரமாக இல்லை என்பதால், தற்போது அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஷைன் டாம் சாக்கோ ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்து பின்பு விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தமிழில் பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படங்களில் நடித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.